சரிவில் இண்டிகோ – அவஸ்தையில் பயணிகள்: நாட்டின் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
இந்திய விமானத் துறையில் தற்போது நிலவும் பிரச்சினையால், உள்நாட்டு விமான சேவை பெரிதும் சீர்குலைந்துள்ளது. இண்டிகோ, ஏர் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களே சந்தையை ஓட்டும் நிலையில் இருக்க, அவற்றில் ஏற்படும் எந்த சிக்கலும் நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தையே பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமான சேவைகளை வழங்குவது இண்டிகோவும், அதன் பின் டாடா குழுமத்தின் ஏர் இந்தியாவும்தான். 140 கோடி மக்கள் கொண்ட நாட்டில், இரண்டு நிறுவனங்களையே அதிகமாக நம்பியிருப்பது ஆபத்தாகிவிடும் என்று நிபுணர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்த நிலையில், இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை அதனைத் தெளிவுபடுத்துகிறது.
உள்நாட்டு சந்தையில் 60% க்கும் மேற்பட்ட பங்கை இண்டிகோ பிடித்திருக்கிறது. ஏர் இந்தியா குழுமம் சுமார் 26% விமானப் போக்குவரத்தை வழங்குகிறது. அதாவது மொத்த உள்நாட்டு சேவையில் 86% ஆளுமையை இவை இரண்டு நிறுவனங்களே கையில் வைத்துள்ளன.
சமீப வாரங்களில் ஏர் இந்தியா சேவைகள் சீராக இருந்தபோதும், இண்டிகோ தொடர்ந்து தடுமாறி வருகிறது. தினசரி விமான ரத்தாக்கள், தாமதங்கள் ஆகியவை திரளான விமான நிலையங்களை முற்றிலும் குழப்பத்தில் ஆழ்த்திட்டது. வியாழக்கிழமை மட்டும் 550க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அடுத்த நாள் நெருக்கடி மேலும் மோசமடைந்து, வெள்ளிக்கிழமை 750க்கும் அதிகமான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு, பணியாளர் பற்றாக்குறை, திட்டமிடல் தவறுகள் ஆகியவை சமீபத்திய சிக்கல்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். தொடர்ந்து நான்கு நாட்களாக சேவை சீர்குலைந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
உதாரணமாக, புவனேஸ்வர்–பெங்களூரு விமானம் ரத்தாகியதால் புதுமண தம்பதிகள் தங்களது வரவேற்பு நிகழ்ச்சியை காணொளி மூலமாக நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை மட்டும் இண்டிகோவின் செயல்திறன் 8.5% என்ற வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவுக்கு சரிந்தது. இந்த வார நெருக்கடிக்கு ஏர் இந்தியா நேரடி காரணம் இல்லை என்றாலும், அதன் சமீபத்திய செயல்பாட்டு குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் பயணிகளை ஏற்கனவே கவலைக்குள்ளாக்கியிருந்ததை மறுக்க முடியாது.
ஆகாசா ஏர், ஸ்பைஸ்ஜெட் போன்ற சிறிய விமான நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவிலான விமானங்களையே இயக்குவதால், ஆயிரக்கணக்கான பயணிகளை திடீரென ஏற்றுச் செல்லும் திறன் அவர்களுக்கு இல்லை. இதனால் ஒரு நிறுவனத்தின் பிரச்சினை களத்திலிருந்து வேகமாக தேசிய பிரச்சினையாக மாறிவிட்டது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய விமானச் சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் இந்த காலத்தில், இந்த சம்பவம் ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது—
ஒரு பெரிய விமான நிறுவனம் தடுமாறினாலே, நாடு முழுவதும் மக்கள் பாதிப்பை உடனே உணர வேண்டியிருக்கும் நிலை.
சந்தையில் போதுமான போட்டி உருவாகும் வரை, சிறிய தடங்கல்களுமே தேசிய விமான நெருக்கடியாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சூழலில், புதிய விதிகள் தொடர்பான குழப்பம் தீர்க்கப்பட்டதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளார். விமான சேவைகளைப் பாதித்திருந்த புதிய டிஜிசிஏ விதிகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், சேவை மெதுவாக சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.