இலங்கையில் சிக்கிய பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய NDRF வீராங்கனை — வீடியோ வைரல்
இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்குக்கிடையில், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. அங்கு பணியாற்றும் இந்திய பெண் மீட்பு வீராங்கனை ஒருவர், ஆபத்தான சூழ்நிலையிலிருந்து ஒரு பச்சிளம் குழந்தையை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் பல்வேறு இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும்போது, எந்த நாட்டாக இருந்தாலும் உதவி செய்ய முன்வருவது இந்தியாவின் நிலையான கொள்கையாகும். அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதாபிமான உதவில் இந்தியா எப்போதும் முன்னிலையாக இருப்பது பல நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்தப் பின்னணியில், சமீபத்தில் உருவான ‘டிட்வா’ புயல் முதலில் இலங்கையை கடுமையாக தாக்கியது. பல மாவட்டங்களில் பதிவான கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோசமான சூழ்நிலைக்காக இலங்கை அரசின் கோரிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, நிவாரணப் பொருட்களுடன் NDRF குழுக்களையும் உடனடியாக அனுப்ப உத்தரவிட்டார்.
அங்கு நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளின்போது, இடிபாடுகளும், வெள்ளநீரும் சூழ்ந்த பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த NDRF பெண் அதிகாரி ஒருவர், உயிர் தப்பித் துடித்த ஒரு பச்சிளம் குழந்தையை கண்டெடுத்து பாதுகாப்பாக தனது கரங்களில் தாங்கிச் சென்றார். அந்த காட்சி இணையத்தில் ஏராளமான மக்களின் மனதை உருகவைத்துள்ளது.
பல உயிர்களை மீட்ட அனுபவம் இருந்தாலும், அந்தக் குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சி அந்த வீராங்கனையின் முகத்தில் தெளிவாகப் பிரதிபலித்தது. இந்த உணர்ச்சி மிகுந்த தருணம் தற்போது உலகம் முழுவதும் பாராட்டு பெற்று வருகிறது.