F-35 போன்ற நவீன போர் விமானங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட புதிய ஆளில்லா வான்வழி தாக்குதல் விமானம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. மனிதர்களை சுமந்து பறக்கும் போர் விமானங்களின் காலம் முடிவடைகிறது என்று தொடர்ச்சியாக வாதிட்ட எலான் மஸ்கின் கருத்தை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவருடைய கூற்றை உண்மையாக்கும் வகையில், துருக்கி தனது புதிய ஆளில்லா போர்திறன் கொண்ட விமானமான ‘பைரக்டர் கிசிலெல்மா’வை அறிமுகப்படுத்தியிருப்பது உலகளாவிய பேசுபொருளாக மாறியுள்ளது.
மனிதர்கள் பறக்கும் பைலட் விமானங்கள் இனி தேவையில்லை என்று எலான் மஸ்க் பல ஆண்டுகளாகக் கூறி வந்தார். ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் உருவாக்கிய F-35 போர் விமானத்தை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் வானில் சுற்றும் காட்சியைப் பகிர்ந்து, “சிலர் இன்னும் பழைய போர் விமானங்களை உருவாக்க கலங்குகிறார்கள்” என்ற கருத்தையும் அவர் பதிவு செய்திருந்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் செலவுக் கட்டுப்பாட்டு ஆலோசனைகளின் போது கூட, F-35 தேவையற்றது என்று மஸ்க் மீண்டும் கூறினார். அதிக வெப்பம் மற்றும் பல தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இந்த விமானத்தின் பராமரிப்பு செலவு இந்த ஆண்டில் மட்டும் 10% உயர்ந்து சுமார் 485 பில்லியன் அமெரிக்க டாலராகியுள்ளது. 3,000-க்கும் மேற்பட்ட F-35 களை தயாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், இதுவரை 1,000 விமானங்கள் மட்டும் அமெரிக்கா மற்றும் கூட்டாண்மை நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முழு திட்டம் 2 டிரில்லியன் டாலரை கடந்துவிடும் என மதிப்பிடப்படுகிறது. மனிதர் இயக்கும் போர் விமானங்களை செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட சென்சார்கள் மற்றும் தன்னாட்சி முறைகள் எளிதில் மீறிவிடும் என மஸ்க் முன்பே எச்சரித்திருந்தார். அந்த கணிப்பு தற்போது நனவாகும் நிலையில் உள்ளது. துருக்கியின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான ‘பைக்கர்’ தனது முதல் ஆளில்லா போர்விமானமான கிசிலெல்மா மாடலை வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதனை முடித்துள்ளது.
தொலைவில் இருக்கும் இலக்கை கண்காணித்து, கண்ணுக்குத் தெரிவதில்லாத தூரத்தில் இருந்து ‘ஏர்–டூ–ஏர்’ ஏவுகணையை ஏவிச் சோதனை வெற்றி கண்டுள்ளது. இது உலகளவில் அரிதான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அசெல்சனின் “முராத்” AESA ரேடார் அமைப்பு உதவியுடன், கிசிலெல்மா விமானத்திலிருந்து ஏவப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட “கோக்டோகான்” ஏவுகணை இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இது துருக்கி விமான வளர்ச்சியின் புதிய படியாகும் என பைக்கர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி செல்சுக் பைரக்டர் தெரிவித்தார்.
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு பெரும் செலவளிக்க முடியாத நாடுகள், குறைந்த செலவில் தங்கள் வான்படையை வலுப்படுத்துவதற்கு இத்தகைய ஆளில்லா போர்விமானங்கள் உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர். துருக்கியின் கிசிலெல்மா, அமெரிக்காவின் F-35, பிரான்சின் ரஃபேல், சீனாவின் J-20 போன்ற சக்திவாய்ந்த விமானங்களுக்கு எதிராக போட்டியிடும் திறன் கொண்டதாக மதிப்பிடப்படுகிறது.
இருப்பினும், மனிதர்களின்றி செயல்படும் இத்தகைய போர் ட்ரோன்கள் முழுமையாக பாரம்பரிய போர் விமானங்களை மாற்றிவிடும் என்ற கருத்துக்கு பல பாதுகாப்பு ஆய்வாளர்கள் இணக்கமில்லை. மிக உயர்தர திறன் கொண்ட ட்ரோன்களை உருவாக்கும் செலவும் குறைவாக இருக்காது என்பதே அவர்களது வாதம். மேலும், ஒரு விமானத்தின் நோக்கம் வெறும் தாக்குதல் அல்ல; எதிரியின் பாதுகாப்பு செலவுகளை அதிகரித்து அழுத்தம் கொடுப்பதும் அதற்குள் அடங்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் B-1 விமானம் சோவியத் ராணுவத்தை அபரிமிதமான செலவினங்களுக்கு ஆளாக்கி, அந்த நாட்டின் பொருளாதாரத்தையே திவால் நிலைக்குத் தள்ளியது என்பதையும் ஆய்வாளர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.
கிசிலெல்மா சோதனையில் வெற்றி கண்டிருந்தாலும், போர்க்களத்தில் முழு ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு செல்வது இன்னும் வழிகாட்டப்பட வேண்டிய பயணம் என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, தன்னாட்சி திறன், மின்னணு போர் எதிர்ப்பு போன்ற முக்கிய துறைகளில் துருக்கி மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதும் நிபுணர் மதிப்பீடு.