டியூட், பைசன், டீசல் – தீபாவளி பந்தயத்தில் வென்றது யார்?
இந்த ஆண்டு தீபாவளி திரைபண்டிகை பெரிய நட்சத்திரப் படங்களின்றி அமைதியாக முடிந்துவிட்டது. ஆனால் சிறிய பட்ஜெட்டில் வெளியான “டியூட்”, “பைசன்”, “டீசல்” என மூன்று படங்களும் தங்களுக்கென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன — ட்ரெய்லர், பாடல்கள், முன் பட வெற்றிகள் என பல காரணங்களால். அந்த எதிர்பார்ப்புகளை மீறி இந்த தீபாவளி போட்டியில் முன்னிலை பெற்றது எது என்பதை பார்க்கலாம்.
டியூட்
‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதனுக்கு தனி ரசிகர் மன்றம் உருவாகியுள்ளது என்பது உறுதி. அதே ரசிகர் உற்சாகம் ‘டியூட்’ படத்திலும் தெளிவாக தெரிகிறது. சிக்கலான கதை அமைப்பை இளைஞர்களும் பெரியவர்களும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்.
இந்தப் படம் தற்போது மூன்று படங்களிலும் மிக அதிக வசூல் பெற்ற படமாக உள்ளது. வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.83 கோடிக்கு மேல் வசூல் செய்ததுடன், BookMyShow தளத்தில் சுமார் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதன் மூலம் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் மேலும் உயர்ந்ததுடன், கீர்த்தீஸ்வரன் தமிழ் சினிமாவுக்கு புதிய நம்பிக்கை எனப் பார்க்கப்படுகிறார்.
பைசன்
மாரி செல்வராஜின் முந்தைய படங்களின் வெற்றியால் இந்தப் படத்துக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. டியூட் அளவுக்கு ஓபனிங் இல்லாவிட்டாலும், வாய்மொழி பாராட்டுகள் காரணமாக திரையரங்குகள் நிரம்பத் தொடங்கின.
சாதிய ஒடுக்குமுறைகளை கடந்து ஒரு விளையாட்டு வீரன் உலகளவில் சாதனை படைப்பது பற்றிய இந்தக் கதை, மாரி செல்வராஜின் தனித்துவ பாணியில் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீண்டும் ஒரு வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். மேலும், இந்த படம் துருவ் விக்ரமுக்கு இதுவரை சிறந்த ஓபனிங் கொடுத்தது.
முதல் நாளில் BookMyShow தளத்தில் 59,000 டிக்கெட்டுகள் விற்ற நிலையில், நான்காவது நாளில் அந்த எண்ணிக்கை 1.27 லட்சமாக உயர்ந்தது. வசூல் அளவில் டியூட் அளவுக்கு இல்லாவிட்டாலும், கதை, நடிப்பு, தொழில்நுட்பம் என ஒரு நேர்மையான, தரமான படைப்பு என்று பாராட்டப்படுகிறது.
டீசல்
டீசல் மாஃபியா என்ற முக்கிய பிரச்சினையை மையமாகக் கொண்டு இயக்குநர் சண்முகம் முத்துசாமி எடுத்திருக்கும் படம் இது. ஆனால் மற்ற இரண்டு படங்களுடன் ஒப்பிடுகையில், இதற்கான ப்ரோமோஷன் குறைவாக இருந்தது. அதேபோல் திரையரங்குகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால் வசூல் சீராக இல்லை.
இயக்குநர் தாமே இதுபற்றி சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதனால், தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தாலும், டீசல் வசூலில் பின் தங்கியுள்ளது.
முடிவு:
இந்த தீபாவளி பந்தயத்தில் வசூல் அடிப்படையில் முன்னிலை பெற்றது ‘டியூட்’,
ஆனால் சினிமா தரத்திலும் சமூக உள்ளடக்கத்திலும் அதிக பாராட்டை பெற்றது ‘பைசன் காளமாடன்’.