அழிவின் நுனியில் அமேசான் — ஆக்சிஜன் களஞ்சியம் இருந்து கார்பன் களஞ்சியமாக மாறும் அபாயம்!
உலகிற்கு அதிக அளவு ஆக்ஸிஜன் வழங்கும் ‘பூமியின் நுரையீரல்’ எனப் பெயர் பெற்ற அமேசான் காடுகள், தற்போது பெருமளவில் கார்பன் உமிழும் நிலையில் உள்ளதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதன் பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.
கார்பன் டை ஆக்ஸைடே உலக வெப்பநிலை உயர்வுக்கும், காற்று மாசடைவதற்கும் முக்கியக் காரணம். வாகனங்கள், தொழிற்துறை புகை, நகரமயமாதல், காடுகள் ஒழிப்பு போன்ற காரணங்களால் இந்த வாயுவின் அளவு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை சமன்படுத்த பல நாடுகள் பெரிய அளவில் நிதி ஒதுக்கி, சுற்றுச்சூழல் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அதில் ‘காடுகளை பாதுகாப்பது’ மிக முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இதிலேயே அமேசான் காடுகளின் பங்கு தனிச்சிறப்புடையது. சுமார் 390 பில்லியன் மரங்களை கொண்ட இக் காட்டு பகுதி, பல்லாயிரக்கணக்கான டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஒரு மரம் வருடத்திற்கு சுமார் 25 கிலோ கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சும் என்பதால், அமேசானின் பங்களிப்பு எவ்வளவு பெரியது என்பதை கணக்கிடலாம். மேலும், இக்காடுகள் நாள்தோறும் 20 பில்லியன் டன் நீராவி வெளியிட்டு நீர்சுழற்சியை சீராக்குகின்றன.
இவ்வாறு பூமியை வெப்பம் அதிகரிப்பிலிருந்து காக்கும் பாதுகாப்புச் சுவராக இருந்த அமேசான் காடுகள், இப்போது அதன் எதிர்மறை பக்கத்துக்கு மாறத் தொடங்கியுள்ளது. ஆக்சிஜனை வழங்குவதற்கு பதிலாக, அதிகளவில் கார்பன் வெளியிடுகிறது என லெய்செஸ்டர், ஷெஃபீல்ட், எடின்பர்க் பல்கலைக்கழக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். 2017 வரை எல்லாம் இயல்பாக இருந்த நிலையில், அதன் பின் நிலைமை கவலைக்கிடமாக மாறியது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த மாற்றம் தொடர்ந்தால், உலக வெப்பமயமாதல் இன்னும் வேகமாக உயரும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். காட்டுவெட்டுகள், பெருமளவில் சுரங்கத் தோண்டுதல், காடு பகுதிகளை வேறு பயன்பாடுகளுக்காக மாற்றுதல் போன்ற செயல்களே அமேசான் காடின் உயிரியல் சமநிலையை முறியடித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கான தீர்வுகளை உடனடியாக ஏற்காவிட்டால், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 2.8°C முதல் 3.1°C வரை உயரக்கூடும்.
2021ல் ஸ்காட்லாந்தில் நடந்த உலகளாவிய காலநிலை மாநாட்டில், 2030க்குள் காடழிப்பை நிறுத்த உறுதி எடுத்திருந்தனர். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் அதனை நடைமுறைப்படுத்த எந்தப் பெரும் முன்னேற்றமும் இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இந்நிலையில், இந்தாண்டு பிரேசிலில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில், உலக வெப்பமண்டல காடுகளைப் பாதுகாக்க 125 பில்லியன் டாலர் நிதி திரட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கும் பல நாடுகள் நிதி வழங்காமல் தவிர்த்துள்ளன.
உலக நாடுகளின் இத்தகைய அக்கறையின்மையால்தான் அமேசான் போன்ற காடுகள் தீவிர பாதிப்பில் சிக்கியுள்ளன என வன ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். புதிதாக கோடிக்கணக்கில் மரம் நட்டுப் புதிய காடுகளை உருவாக்குவது கடினம்; ஆனால், உள்ள காடுகளை பாதுகாப்பதே மிக அவசியமெனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.