டெல்லியில் பட்டாசு தீபாவளி தாக்கம்: WHO அளவுகோலை விட 15 மடங்கு அதிக காற்று மாசு
உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து டெல்லியில் தீபாவளி தினத்தில் மக்கள் வெகுவாக பட்டாசு வெடித்ததின் விளைவாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்ததை விட 15 மடங்கு அதிக அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்பே பட்டாசு வெடிக்க தடை விதித்திருந்த நிலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளி இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்தது.
ஆனால், நேரக் கட்டுப்பாடு மீறப்பட்டதுடன், தடை செய்யப்பட்ட பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் காற்று மாசு மிக அதிகரித்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 6 மணி நிலவரப்படி) டெல்லியின் காற்றில் ஒரு கன மீட்டருக்கு 228 மைக்ரோகிராம் அளவு நுண்தூசி (PM2.5) மாசு பதிவாகியுள்ளது. இது WHO அனுமதித்த 15 மைக்ரோகிராமை விட 15.1 மடங்கு அதிகம்.
சுவிட்சர்லாந்தின் IQAir என்ற நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய காற்றுத் தர அறிக்கையிலும், டெல்லி தற்போது உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட நகரமாக உள்ளது. டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 429 ஆக பதிவாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர் (260) இரண்டாம் இடத்தில், கராச்சி (182) மூன்றாம் இடத்தில் உள்ளன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில், 51–100 AQI அளவு “திருப்திகரமானது”, 101–200 “மிதமானது”, 201–300 “மோசமானது”, 301–400 “மிகவும் மோசமானது”, 401–500 “கடுமையானது” என வகைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி தற்போது “கடுமையான” நிலையைத் தாண்டி உள்ளதாகவும், இது ஆரோக்கியமான மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.