விஜய் மல்லையா–நீரவ் மோடி உள்ளிட்ட 15 பேருக்கு ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி’ பட்டம் – மத்திய அரசு தகவல்
பெரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா உள்ளிட்ட 15 பேர், அதிகாரப்பூர்வமாக தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. முராரிலால் மீனா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தடுப்பு சட்டம், 2018-ன் கீழ் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
15 பேரில் 9 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கெதிரான மிகப்பெரிய நிதி மோசடிகளில் தொடர்புடையவர்கள் என்பதும், அவர்களில் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற முக்கிய தொழிலதிபர்களும் இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
இந்த 15 பேரின் மோசடி காரணமாக மொத்தத்தில் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை ₹19,817 கோடி வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.