சீனாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “நவம்பர் 1 முதல் 155% வரி விதிக்கப்படும்!”
சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், அந்நாட்டின் பொருட்களுக்கு 155% வரை வரி விதிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் கூறியதாவது:
“சீனாவை அமெரிக்கா எப்போதும் மரியாதையுடன் அணுகியுள்ளது. ஆனால் அவர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். இதனை இனி பொறுத்துக் கொள்ள முடியாது. தற்போது சீனாவிடம் இருந்து 55% வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1 முதல் அந்த வரி 155% ஆக உயர்த்தப்படும்,” என்றார்.
மேலும், அரிதான கனிமங்கள், ஃபெண்டானில் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவை வர்த்தக பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சங்களாக உள்ளன என்றும், தேவையானால் புதிய ஏற்றுமதி தடைகளும் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப் தொடர்ந்து கூறினார்:
“பல ஆண்டுகளாக உலக நாடுகள் அமெரிக்காவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் அந்த காலம் முடிந்துவிட்டது. பதிலடி வரிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு அமெரிக்காவின் நிலை மாறிவிட்டது. இனி யாரும் எங்களைப் பயன்படுத்த முடியாது,” என்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கத் தயாராக உள்ளதாகவும், “அமெரிக்கா–சீனா இடையே வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தம் விரைவில் அமையும் என நம்புகிறேன்,” என்றும் ட்ரம்ப் கூறினார்.
இதற்கிடையில், ட்ரம்ப் கருத்துக்கள் வெளிவந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, உலக வர்த்தக அமைப்பில் (WTO) சீனாவின் நிரந்தர பிரதிநிதியாக இருந்த லீ செங்காங் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக லீ யோங்ஜி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.