ஹாலிவுட் நட்சத்திரம் ஜானி டெப்பின் கலைக் கண்காட்சி ஜப்பானில் துவக்கம்!
ஜப்பானில் ஹாலிவுட் பிரபலமான நடிகர் ஜானி டெப்பின் ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்கள் இடம்பெற்ற கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து பார்வையிடுகின்றனர்.
பிளாட்டூன், க்ரை-பேபி, டெட் மேன் உள்ளிட்ட பல படங்களில் கவனம் பெற்ற ஜானி டெப், ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ தொடரில் ஜாக் ஸ்பாரோவாக நடித்ததன் மூலம் உலகளவில் பெரும் புகழ் பெற்றவர்.
சினிமாவிற்கு அப்பாற்பட்ட துறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தும் டெப், பல்வேறு ஓவியங்களையும் கலைப் படைப்புகளையும் உருவாக்கி வருகிறார்.
இந்த பின்னணியில், ‘எ பன்ச் ஆஃப் ஸ்டஃப்’ (A Bunch of Stuff) எனும் தலைப்பில், அவரது ஓவியங்கள் மற்றும் கலைப் படைப்புகளை வெளிப்படுத்தும் தனியார் கண்காட்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் திறக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் மட்டுமல்லாது கலை உலகிலும் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கியுள்ள ஜானி டெப்பின் படைப்புகளை நெருக்கமாகக் காணும் சந்தர்ப்பமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருகின்றனர்.