சீனாவின் ரோபோட்டிக்ஸ் எழுச்சி – நன்மையா அல்லது புதிய அபாயமா?
உலகின் முன்னணி மனித வடிவ ரோபோக்களை உருவாக்கும் போட்டியில், அமெரிக்காவுக்கு எதிராக சீனாவும் முழு தீவிரத்தில் ஈடுபடுகிறது. குறைந்த விலை, அதிக அளவு உற்பத்தி என்ற இரண்டிலும் சீனா முன்னணியில் இருப்பது அரசுக்கு சாதகமா, பாதகமா என்ற விவாதத்தை தூண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டிலிருந்து தொழிற்சாலை ரோபோக்களின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. 2014ல் சீன சமூக அறிவியல் அகாடமியில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங், நாட்டின் உற்பத்தித் திறனை மேம்படுத்த ‘ரோபோக்களின் மறுமலர்ச்சி’ அவசியம் என வலியுறுத்தினார்.
2014ல் அறிமுகமான “4653 மனிதருக்கான இயந்திரம்” திட்டத்துக்குப் பிறகு, 2015ல் தொழிற்துறைகளில் மனிதர்களை ரோபோக்களால் மாற்றும் செயல்திட்டத்தை அரசு வெளியிட்டது. இதனை ஏற்றுக்கொண்டு சுமார் 2,000க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்தன.
2016இல் சீனாவில் 60,000க்கும் மேற்பட்ட தொழில்துறை ரோபோக்கள் இருந்த நிலையில், 10,000 தொழிலாளர்களுக்கு 2017ல் 97 ரோபோக்கள் இருந்த எண்ணிக்கை, 2023ல் 392 ஆகவும், 2024ல் 470 ஆகவும் உயர்ந்துள்ளது. “மேட் இன் சீனா 2025” வளர்ச்சி திட்டத்தில் மனித வடிவ ரோபாட்டிக்ஸ் முக்கிய முன்னுரிமை பெற்ற துறையாக சேர்க்கப்பட்டது.
கார் உற்பத்தி, மின்னணுவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ரோபோக்களைப் பயன்படுத்த அரசின் மானியங்களும் வழங்கப்படுகின்றன. இன்று 150க்கும் மேற்பட்ட சீன ரோபோ நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு நேரடியாக போட்டியாளர்களாக உள்ளன. உலகளவில் தயாராகும் ரோபோக்களில் மூன்றில் இரண்டு பங்கும் கடந்த ஆண்டு சீனாவில் இருந்தது.
கடந்த ஆண்டு மட்டும் சீன தொழிற்சாலைகளில் 3 லட்சத்திற்கும் அதிகமான புதிய ரோபோக்கள் சேர்க்கப்பட்டன. இதே காலத்தில் அமெரிக்காவில் சேர்க்கப்பட்ட ரோபோக்கள் 34,000 மட்டுமே. இதன்மூலம், சீனா ஜப்பானை கடந்து ரோபோ உற்பத்தி உலகப் பங்கில் மூன்றில் ஒரு பங்கை பிடித்துள்ளது. சீன ரோபோ பங்குகள் 30% வரை உயர்ந்துள்ளன.
UBTech Robotics எனும் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் 4% உயர்ந்துள்ளன. இந்த நிறுவனம் உலகில் மிகக் குறைந்த விலையில் மனித உருவ ரோபோ R1-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 25 கிலோ எடை, நான்கு அடி உயரம் கொண்ட இந்த ரோபோ, பல திறன்களை ஒரே நேரத்தில் கையாளும் பெரிய மல்டிமோடல் AI மாடலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 5,900 டாலர்கள் — இந்தியாவின் MG Comet EV-யை விடவும் குறைவு. சீன ரோபோக்கள் கார் உதிரிபாகங்களை கையாள்வது முதல் இராணுவப் பணிகளைச் செய்வது வரை பல்வேறு துறைகளில் செயல்படுகின்றன. சீன ராணுவத்தில் ரோபோ நாய்கள் ஏற்கெனவே நுழைக்கப்பட்ட நிலையில், மனித வடிவ ரோபோ வீரர்களை சேர்க்கும் திட்டமும் துவங்கியுள்ளது.
யுபிடெக் நிறுவனத்திற்கும் சீன ராணுவத்திற்கும் 330 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு இறுதியில் 500 மனித வடிவ ரோபோக்கள் சீன ராணுவத்துக்குக் கொடுக்கப்படுகின்றன. வியட்நாம் எல்லைப் பகுதியில் இவை கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகத் தகவல். படிப்படியாக எல்லை முழுவதும் ரோபோ வீரர்களை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சீன வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ரோபோட்டிக்ஸ் துறையில் “பெரிய குமிழி” உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. அதிக உற்பத்தி காரணமாக ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் தடைப்படலாம், ஆகவே கட்டுப்பாடு அவசியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.