பெரும் அழிவை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயல் : தள்ளாடும் இலங்கை
டிட்வா புயல் தாக்கம் இலங்கை மக்களையும், அந்நாட்டு அரசையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில், “ஆபரேஷன் சாகர் பந்து” என்ற நடவடிக்கையின் கீழ் முதற்கட்ட நிவாரணமாக 27 டன் உதவி பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. தேவையான அனைத்து ஆதரவையும் தொடர்ந்து வழங்க தயாராக இருப்பதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையை பெரிதும் பாதித்த இந்த புயல், இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பிற்கு காரணமானது. சுமார் 150 பேர் காணாமல் போயிருப்பதுடன், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் களைந்து தவிக்கும் நிலை உள்ளது. இதனால், அந்நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரழிவின் தொடக்கம் நவம்பர் 17ஆம் தேதி ஏற்பட்ட கனமழையில்தான். அன்று இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வெள்ள நிலையை உருவாக்கியது. அதன் பின் உருவான டிட்வா புயல், ஏற்கனவே வெள்ளத்தில் வாடித்த பகுதிகளை மேலும் சீரழித்தது. இதனால் நாடு முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மண்சரிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆறுகள் பலவும் கரைபுரண்டு ஓடும் நிலையில் உள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். குறிப்பாக கேகாலை பகுதியில் ஏற்பட்ட பெரும் மண்சரிவில் 20 சிறுவர்கள் உட்பட 120 பேர் காணாமல் போனதாக வெளியான தகவல் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடுங்காத வெள்ளத்தில் யானைகள் கூட அடித்துச் செல்லப்படும் காட்சிகள், இந்த பேரழிவின் தீவிரத்தைக் காட்டுகின்றன.
நாட்டின் பல பகுதிகளில் சாலைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டதால் மீட்பு நடவடிக்கைகள் தாமதமடைந்தன. இருப்பினும், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
அனுராதபுர சிறைச்சாலை வெள்ளம் சூழ்ந்ததால் கைதிகள் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கினர். உடனடியாக அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு, அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
புயல் தாக்கத்தால் துவண்ட இலங்கைக்கு பல நாடுகள் உதவி அனுப்பி வருகின்றன. இந்தியா முக்கியமானதாக நிவாரணப் பொருட்களை தொடர்ச்சியாக அனுப்பி வருகிறது. கூடாரங்கள், போர்வைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 12 டன் உதவிப் பொருட்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. இலங்கையில் இருக்கும் இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இலங்கையில் ஏற்பட்ட பேரழிவில் பலர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதிலிருந்து இலங்கை விரைவில் மீண்டு வரவேண்டும் என்பதையும், மேலதிக உதவிகள் கேட்டால் இந்தியா வழங்கத் தயார் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை, வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி கப்பல்களில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.