ஊழியர் தற்கொலை வழக்கு: ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மீது வழக்குப் பதிவு
கர்நாடக மாநிலம் சுப்ரமண்யபுரா காவல் நிலைய போலீசார், ஊழியர் தற்கொலை வழக்கில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஓலா எலக்ட்ரிக்கில் பொறியாளராக பணியாற்றிய கே. அரவிந்த், கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார். பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது சகோதரர் அஸ்வின் கண்ணன், அக்டோபர் 6 அன்று போலீசில் புகார் அளித்தார்.
அரவிந்த் எழுதியதாகக் கூறப்படும் 28 பக்க கடிதத்தில், ஊதியம் வழங்காமை மற்றும் மேலதிகாரிகள் அளித்த அழுத்தமே தற்கொலைக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மரணத்திற்கு இரு நாட்கள் கழித்து அவரது வங்கி கணக்கில் ₹17.46 லட்சம் NEFT மூலம் வரவு செய்யப்பட்டிருந்தது; இது குறித்து குடும்பம் சந்தேகம் வெளியிட்டது.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், நிறுவனத்திடமிருந்து போதுமான விளக்கம் இல்லாததால், பவிஷ் அகர்வால், சுப்ரத் குமார் தாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்,
“விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்போம். ஊழியர்களின் நலனில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அரவிந்தின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,”
என்று கூறியுள்ளது.
அதே சமயம், நிறுவனர் மற்றும் அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து, நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.