“விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்” – ராகுல் காந்தியிடம் பேக்கரி உரிமையாளர் நகைச்சுவை கோரிக்கை!
டெல்லியில் பிரபலமானதும் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்டேவாலா பேக்கரியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில் சந்தித்தார். தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் வாங்க வந்த ராகுல், அங்கு தன் கையால் இனிப்புகள் தயாரித்தும் பார்த்தார். இதற்கான வீடியோவை அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த பேக்கரி, பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தின் விருப்பமான கடைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் கூறியதாவது:
“ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. அவரிடம் நான் நகைச்சுவையாக — ‘விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்; அப்போதுதான் உங்கள் திருமணத்திற்கான இனிப்பு ஆர்டர் எங்களுக்கு வரும்!’ என்று கூறினேன்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது,
“ராகுல் எங்கள் கடைக்கு வரும் போது தானாகவே இனிப்புகள் செய்வதாகச் சொன்னார். அவரின் தந்தை ராஜீவ் காந்திக்கு ‘இமார்தி’ (ஜிலேபி வகை) மிகவும் பிடித்தது. அதை முயற்சி செய்யுமாறு ராகுலிடம் சொன்னேன். அவருக்கும் ‘பெசன் லட்டு’ பிடித்திருந்தது; அந்த இரண்டு இனிப்புகளையும் அவர் தன் கையாலேயே தயாரித்தார்,” என தெரிவித்தார்.