பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம்
பாகிஸ்தான் ஒருநாள் (ODI) கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் அந்த பொறுப்பில் இருந்தார். எனினும், அவரை நீக்கி, புதிய கேப்டனாக அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசி (PCB) எந்தவித விளக்கமும் வெளியிடவில்லை.
அடுத்த மாதம் பாகிஸ்தான் தாயகத்தில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முதல், அஃப்ரிடி கேப்டனாக களமிறங்க உள்ளார்.
இதற்கு முன்பு, 2024-ஆம் ஆண்டு நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணியை அவர் வழிநடத்தியிருந்தார். இதுவரை 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அஃப்ரிடி, மொத்தம் 131 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.
அணியின் தலைமைப் பொறுப்பை வழங்கும் முடிவு, பயிற்சியாளர் மைக் ஹெசன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.