போர் விமான இன்ஜின்களில் தன்னிறைவு பெறும் இந்தியா: ஹைதராபாதில் சாஃப்ரான் MRO மையம் தொடக்கம்
இந்தியா தனது போர் விமானங்களுக்கான இன்ஜின்களையும், உயர் ரக STEALTH விமானமான AMCA-வையும் நாட்டிலேயே உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஹைதராபாதில் திறக்கப்பட்ட புதிய சாஃப்ரான் ஏர்கிராஃப்ட் இன்ஜின் சர்வீஸ் மையம் (MRO) இந்த முயற்சிக்கு முக்கிய துணையாக அமைகிறது.
இந்த MRO மையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது அவர், இந்திய விமானத்துறை புதிய உயரங்களை எட்டிக் கொண்டிருப்பதாகவும், சாஃப்ரான் மையம் இந்தியாவை உலகளாவிய MRO மையமாக நிலைநிறுத்த உதவும் என்றும் கூறினார். மேலும், இளைஞர்களுக்கான தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள், உலக தரம் வாய்ந்த பயிற்சி, அறிவு பரிமாற்றங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கூட்டாண்மைகள் ஆகியவை இம்மையத்தின் மூலம் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, 5-ம் தலைமுறை போர் விமான இன்ஜின்கள் உருவாக்கும் பணியில் சாஃப்ரான் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், வெளிநாட்டு சார்பை குறைத்து தன்னிறைவு அடைவதே பிரதான இலக்கு.
அதே நேரத்தில், இந்தியாவின் AMCA திட்டத்தில் பங்கேற்க ஏழு முன்னணி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை: Larson & Turbo, Hindustan Aeronautics Limited, Tata Advanced Systems, Adani Defence உள்ளிட்டவை. இந்த நிறுவனங்களில் இரண்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் 15,000 கோடி ரூபாய் நிதியுடன், தரம் உயர்ந்த ஐந்து AMCA முன்னோடி விமானங்களை உருவாக்கி, அதன் உற்பத்தி உரிமைகளை பெற்றுக்கொள்ள உள்ளன.
AMCA திட்டம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 125க்கும் மேற்பட்ட விமானங்களை வழங்கும் இலக்குடன் உள்ளது. திட்டத்தின் முதல் விமானங்கள் 2035-க்குப் பிறகு இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தேஜஸ் விமானங்களுக்கு அமெரிக்க GE இன்ஜின்கள் தாமதமாக இருப்பதால், இந்தியாவில் உள்நாட்டு இன்ஜின்களை தயாரிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
சாஃப்ரான் MRO மையத்தின் தொடக்கம், இந்தியாவின் வான்வெளி துறையில் தன்னிறைவு பெறும் பயணத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. உயர்தர இன்ஜின்களுக்கு நாட்டிலேயே பராமரிப்பு, பழுது பார்க்கும் திறன் உருவாகுவதோடு, திறமையான மனித வளம் உருவாகும். இதன் மூலம் அடுத்த தலைமுறை மறைமுக போர் விமானங்கள் நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியில் கால தாமதங்கள் குறையும், செயல்முறைத் தயார் நிலை மேம்படும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.