“ஆபரேஷன் சிந்தூரை விட கடுமையான தாக்குதல் எதிர்கொள்ள நேரிடும்” – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் திடீர் எச்சரிக்கை
பாகிஸ்தான் இந்தியாவுக்கு மீண்டும் எந்தவொரு தாக்குதல் முயற்சியும் மேற்கொண்டால், கடந்த ஆபரேஷன் சிந்துரைவிட பலமடங்கு தீவிரமான பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
சீன–பாகிஸ்தான் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக அதிகரிக்கும் சூழலில், இந்திய முப்படைகளும் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. அதற்கான பகுதியாக, ஹரித்வாருக்கு அருகேயுள்ள துதலா தயாள்வாலா – ஜில்மில் ஜீல் பாதுகாப்பு வனம் பகுதியில், ராணுவத்தின் மேற்கு கட்டளைப் பிரிவு “ராம் பிரஹார்” என்ற பெயரில் பெருமளவு போர்ப் பயிற்சியை நடத்தியது.
நான்கு வாரங்கள் நீடித்த இந்த ஆபரேஷன் காலத்தில், இந்திய இராணுவம் தனது முழு திறனையும் வெளிப்படுத்தியது. இமயமலையின் கடினமான மலை நிலப்பரப்பில் போருக்கு தேவையான புதிய யுத்த-வியூகங்கள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்புத் தளம் உள்ளிட்ட பல திறன்கள் இதில் மேம்படுத்தப்பட்டன.
இந்த விரிவான பயிற்சியில் மலைப்படைகள், சிறப்புப் படைகள், பீரங்கிப்படைகள், ராணுவ விமான பிரிவுகள், உளவு பிரிவுகள், தகவல் தொடர்பு அணிகள் என பல பிரிவுகள் இணைந்து செயல்பட்டன.
செனாப், ரவி, சட்லெஜ் போன்ற ஆறுகளால் சூழப்பட்ட மேற்கு எல்லைப்பகுதி என்பதால், நீர்நிலைகளிலும் சமவெளிகளிலும் துல்லியமான தாக்குதல்களைச் செய்யும் பயிற்சிகள் நடத்தப்பட்டன.
மேலும், அப்பாச்சி மற்றும் ருத்ரா ஹெலிகாப்டர்கள் இலக்குகளை நேரடியாக தாக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
மேற்கு கட்டளை பிரிவின் அனைத்து முன்னேற்றமான ஆயுதங்களும், திட்டங்களும், புதிய தொழில்நுட்பங்களும் இந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூரின் போது ஏற்பட்ட பெரும் இழப்புகளை அனுபவித்த பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக அசட்டையாக செயல்பட்டால், இம்முறை தாக்குதல் எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பது “முன்கூட்டியே விளக்கத்தக்கது” என்று மேற்கு கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் எச்சரித்தார்.
ராம் பிரஹார் பயிற்சி நிலம், வான், சைபர் என மூன்று தளங்களிலும் நிகழ்நேரத்தில் முடிவெடுக்கும் திறனை வெளிப்படுத்தியதாகவும், இது எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு தூண்டலுக்கும் இந்தியா தரக்கூடிய வன்மையான பதிலடிக்கான தயாரிப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.