ஹாங்காஙில் உள்ள ஒரு பன்மாடிக் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து, 14 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்து அங்குள்ள மக்களின் மனதை பதற வைத்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தைப் பற்றிய விரிவான தகவல்களைக் கீழே பார்ப்போம்.
தை போ மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குடியிருப்பு வளாகத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்தது. வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் ஆரம்பித்த தீ, சில நிமிடங்களில் ஏழு மாடிகளுக்கு மேல் பரவி கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உருவெடுத்தது.
சுமார் 2000 குடும்பங்கள் வசிக்கும் அந்த கட்டிடத் தொகுதியில் தொடக்கத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் நிலைமை மோசமடைந்ததால், பலி எண்ணிக்கை 10-ஐ கடந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் அச்சம் நிலவுகிறது.
தீ அதிவேகமாக பரவ காரணமாக கட்டிடத்தின் வெளியே சீரமைப்பு பணிகளுக்காக வைத்திருந்த மூங்கில் எச்சங்கள் மற்றும் பாதுகாப்பு வலைகளே முக்கியமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை தீ ஒரு மாடியிலிருந்து மற்றொரு மாடிக்கு விரைவாகச் செல்ல உதவியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் ஆரம்பித்த தீ, விடியற்காலம் வரை முழுமையாக அணைக்க முடியாமல் தீயணைப்பு படையினருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. கட்டிடத்துக்குள் இன்னும் பலர் சிறைப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தால், அவர்களை உயிருடன் மீட்க தீயணைப்ப வீரர்கள் ஆபத்து மத்தியில் பணியில் ஈடுபட்டனர்.
தை போ பகுதி மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள இடமாக இருப்பதால், தனித்தனி வீடுகள் அமைப்பது சாத்தியமில்லை. இதனால் அங்கு வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் உயரமான குடியிருப்புகள் நெருக்கடியாக கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு நீளவும் அகலமாகவும் எழுந்த கட்டிடங்கள் போதுமான பாதுகாப்பு விதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வி தற்போது ஹாங்காங் மக்களிடையே எழுந்துள்ளது.