கிழக்கு இலங்கையில் கொட்டித் தீர்த்த மழை – வெள்ளத்தில் தத்தளிக்கும் மட்டக்களப்பு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்த அதிபெரிய மழை, மட்டக்களப்பு மாவட்டத்தை முழுவதும் வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால், மட்டக்களப்பில் இத்தனைக்கும் அதிகமான, இதுவரை காணாத அளவிலான கனமழை பொழிந்தது. இந்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் வெள்ள நிலை உருவாகி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு–மண்டூர் சாலை மற்றும் பாலையடிவட்டை–வெல்லாவெளி சாலைகளில் இரண்டு அடிக்கு மேல் நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நவகிரிகுளம் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டதால் போரதீவுப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளநீர் விளைநிலங்களில் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், மட்டக்களப்பு பகுதியில் மழை தொடரும் வாய்ப்பு இருப்பதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.