அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் பறப்பைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெடித்து நொறுங்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புலனாய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்துக்கு முன்னே நடந்த பயணத்தின் போது கூட போயிங் 787 விமானத்தில் மின்சார கோளாறுகள் ஏற்பட்டதாக விசாரணை கூறுகிறது. இதன் விவரங்களை பார்க்கலாம்.
சில மாதங்களுக்கு முன் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் டேக் ஆப் செய்த தருணங்களில் திடீரென தீப்பிடித்து சிதறியது. 160-க்கும் மேலானோர் உயிரிழந்த இந்த துயர சம்பவத்தின் காரணத்தை அறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட பரிசோதனையில், விமானத்தின் COCKPIT VOICE RECORDER-ல் பதிவான ஒலிகள் சந்தேகத்தை கிளப்பின. என்ஜினுக்கான எரிபொருள் இணைப்பை நிறுத்தும் சுவிட்ச் ஏன் ஆஃப் நிலையில் இருந்தது என்று விமானிகள் பேசிக் கொண்டிருப்பது பதிவாகியதால் இது சதி தொடர்பான தாக்கத்தா என்ற குழப்பம் எழுந்தது. ஆனால், தொடர்ந்து நடத்திய ஆய்வில் இது மனித தவறல்ல, தொழில்நுட்ப பிரச்சினை என்பதும் உறுதியாகியுள்ளது.
அதே நேரத்தில், விபத்துக்கு 48 மணிநேரத்திற்கு முன்பு போயிங் 787 விமானத்தில் 3 மின் கோளாறுகள் ஏற்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதற்கு முந்தைய பறப்பின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால் stabiliser motor பாகம் மாற்றப்பட்டிருப்பதும் பராமரிப்பு பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போயிங் 787 விமானத்தில் உள்ள stabiliser motor முக்கியமான பாகங்களுக்கு மின்சாரத்தை வழங்கவும், தகவல் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளவும் பயன்படுகிறது. குறிப்பாக, எரிபொருள் தொட்டியில் தீப்பற்றாமல் இருக்க FIRE INERTOR மூலம் நைட்ரஜன் வாயு உருவாக்கும் செயல்முறையிலும் stabiliser motor அவசியமானது. முந்தைய பயணத்தின் போதே இந்த stabiliser motor சரி செய்யப்பட்டிருந்தாலும், விபத்து நிகழ்ந்ததே அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
விபத்துக்கான முக்கிய காரணம், FIRE INERTOR பாகத்தை 24 மணிநேரத்தில் மீண்டும் பொருத்த வேண்டிய நிலையில், 48 மணிநேரமாகியும் போயிங் 787 விமானத்தில் அது மீள பொருத்தப்படாததே என்று விசாரணை கூறுகிறது. இதுவே எரிபொருள் தொட்டியில் தீப்பரவ காரணமாக இருந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
தினசரி ஆயிரக்கணக்கானோர் விமானப் பயணத்தை நம்பி நகர்ந்து வரும் சூழலில், தொழில்நுட்ப பிழைகளால் இவ்வாறான கோர விபத்துகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.