இந்தியா–அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக உடன்பாடு இறுதி நிலைக்கு நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன. இதுகுறித்த விரிவான செய்தி இதோ.
இரண்டாவது முறையாக பதவி ஏற்ற ட்ரம்ப், பல நாடுகளுக்கு மீதுமான பரஸ்பர வரிகளை உயர்த்தினார். வர்த்தக பற்றாக்குறை என்ற காரணத்தை முன்வைத்து கடந்த ஜூலையில் இந்தியாவிற்கு 25% சுங்க வரி விதித்ததுடன், பின்னர் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதை சுட்டிக்காட்டி ஆகஸ்டில் மேலும் 25% வரி உயர்த்தினார்.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையிலும் அமெரிக்க அரசு இந்த வரிகளை விதித்ததை இந்தியா கடுமையாக எதிர்த்து, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அமெரிக்கா தனது வேளாண்மை மற்றும் பால் சார்ந்த பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்தியதும், இந்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்ததும் பேச்சுவார்த்தை முடக்கம் அடைவதற்கான முக்கிய காரணமாக கூறப்பட்டன.
ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் எண்ணெய் பெற்றதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா ஆண்டுக்கு சுமார் 2.5 பில்லியன் டாலர் சேமித்துள்ளதாக CLSA அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் நாட்டின் எண்ணெய் தேவையில் 88% இறக்குமதியையே சார்ந்துள்ள சூழ்நிலையில், இந்த அளவு சேமிப்பு மிக குறைவு என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இத்தருணத்தில், ரோஸ்நெஃப்ட் மற்றும் லூக்கோயில் போன்ற ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களிற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததைத் தொடர்ந்து, முன் மாதத்தை ஒப்பிடும்போது இந்தியா ரஷ்யாவிலிருந்து வாங்கும் எண்ணெய் 50% குறைந்து, தற்போது ஒரு நாளைக்கு சுமார் 9.48 லட்சம் பீப்பாய்க்கு சரிந்துள்ளது.
மறுபுறம், அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஒரு நாளுக்கு 5.4 லட்சம் பீப்பாய் எண்ணெய் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதே நேரத்தில், முதன்முறையாக அமெரிக்காவுடன் எல்.பி.ஜி. இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்க வளைகுடா கடற்கரையிலிருந்து ஆண்டுக்கு 22 லட்சம் டன் எல்.பி.ஜி. வாங்குவதற்காக, மூன்று இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளன. நாட்டின் மொத்த எல்.பி.ஜி. இறக்குமதியின் 10% இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து வரும். இந்த மாற்றங்கள் அனைத்தும் இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உடனடியாக உருவாகும் சாத்தியக்குறிகளை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பேச்சுவார்த்தைகள் மிகவும் முன்னேற்றமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருந்தாலும், இந்தியா அவசரப்பட வேண்டிய சூழ்நிலையில் இல்லை என்பதை அமெரிக்காவிற்கு தெளிவாக உணர்த்தியுள்ளது.