ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த பெரும் தாக்குதலைத் தடுப்பதன் மூலம் 250 பேரின் உயிரை பாதுகாத்ததற்காக சிஐஎஸ்எப் வீரர்கள் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி நடவடிக்கையாக, இந்திய பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை ஆரம்பித்து, பாகிஸ்தானில் அமைந்திருந்த முக்கியமான தீவிரவாத முகாம்களை சுட்டுத்தகர்த்தன. இதில், பயங்கரவாதிகளுக்கு துணைநின்ற பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பெரிய இழப்புகள் ஏற்பட்டன.
இந்த நடவடிக்கைகளின் நடுவில், பாகிஸ்தான் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த ஆபத்தான சதி முயற்சியை சிஐஎஸ்எப் வீரர்கள் திறம்பட தடுப்பதில் வெற்றி பெற்றனர். இதில் பங்கேற்ற 19 வீரர்களுக்கு இயக்குநர் ஜெனரல் விருது வழங்கப்பட்டது.
மே 6ஆம் தேதி இரவு தொடங்கிய தாக்குதல் முயற்சிகளின் போது, உரி நீர்மின் நிலையத்தை இலக்காகக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. அந்த சமயத்தில் துணை தளபதி ரவி யாதவ் தலைமையிலான குழு, இந்திய நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், அப்பகுதியில் இருந்த 250 பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றியது. மேலும், பல பாகிஸ்தான் ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக சிஐஎஸ்எப் அறிவித்துள்ளது.