டெல்லிக்கு ‘இந்திரபிரஸ்தா’ எனப் பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை!
தலைநகர் டெல்லிக்கு பழமையான பெயரான ‘இந்திரபிரஸ்தா’ என மாற்றக் கோரியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி கலாச்சாரத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு, விஸ்வ இந்து பரிஷத் டெல்லி பிரிவு செயலாளர் சுரேந்திர குமார் குப்தா எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
“மகாபாரதக் காலத்தில் டெல்லி ‘இந்திரபிரஸ்தா’ என அழைக்கப்பட்டது. எனவே, நம் நாட்டின் தொன்மை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், தலைநகர் டெல்லிக்கு ‘இந்திரபிரஸ்தா’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
அத்துடன், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி ரயில் நிலையம், ஷானகான்பாத் வளர்ச்சி வாரியம் ஆகியவற்றுக்கும் ‘இந்திரபிரஸ்தா’ என்ற பெயர் வழங்கப்பட வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “பெயர் மாற்றம் என்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல; அது நாட்டின் உணர்வையும் வரலாற்றுப் பெருமையையும் பிரதிபலிக்கும் ஒன்று. ‘இந்திரபிரஸ்தா’ என்ற பெயர் கூறினால், நாம் அதை 5,000 ஆண்டுகால தொன்மை வரலாற்றுடன் இணைக்க முடியும். முஸ்லிம் ஆட்சியாளர்களின் நினைவுச்சின்னங்களுக்கு அருகில், பாண்டவர் காலத்தினைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் முனிவர்களுக்காக நினைவிடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அதோடு, டெல்லியில் மன்னர் ஹேம சந்திர விக்கிரமாதித்யாவுக்காகவும் நினைவிடம் அமைக்கப்பட வேண்டும்,” என சுரேந்திர குமார் குப்தா தனது கடிதத்தில் கோரியுள்ளார்.