இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து HAMMER வகை ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த முழு விவரம் வருமாறு:
பாஜக அரசு முன்னெடுத்த மேக் இன் இந்தியா முயற்சி, நாட்டின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதன் அடிப்படையில், உலகின் முக்கிய இராணுவ வல்லரசுகளுடன் இணைந்து உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரான்ஸுடன் இணைந்து HAMMER ரக ஏவுகணைகள் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ காலத்தில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை துல்லியமாக அழிக்க இந்த HAMMER ஏவுகணைகள் உதவியதன் பின்னணியில், இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவின் ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம் மற்றும் பிரான்ஸின் ‘Safran Electronics and Defence’ நிறுவனம் இணைந்து இந்த ஏவுகணைகளை உருவாக்க உள்ளன. 2020-ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, HAMMER ஏவுகணைகளை வாங்கும் ஆர்வத்தை இந்தியா வெளிப்படுத்தியது. இன்று அந்த ஆவல், இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்யும் நிலைக்கு வளர்ந்து உள்ளது.
பிரான்ஸ் வடிவமைப்பில் உருவான HAMMER ஏவுகணைகள், போர் விமானங்களில் இருந்து தரை இலக்குகளை மிக துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டவையாகும். 125 கிலோ, 250 கிலோ, 500 கிலோ, 1000 கிலோ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த ஏவுகணைகள், தங்களுக்கான எடையின்படி அதிக துல்லியத்துடன் இலக்கைத் தாக்கும் திறன் கொண்டவை. நகரும் வாகனங்கள் அல்லது மாற்றம் அடையும் இலக்குகளையும் 99% துல்லியத்துடன் தாக்கும் என்பதால், இது மிகவும் நம்பகமான ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
2008ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட HAMMER ஏவுகணைகள், தற்போது உக்ரைனுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்போது இந்தியாவும் இந்த உற்பத்திச் சங்கிலியில் இணைகிறது.
ஆண்டின் தொடக்கத்தில் 63,000 கோடி ரூபாய்க்கு 26 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்ட நிலையில், இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இது இந்தியா–பிரான்ஸ் ராணுவத் தொடர்பு மேலும் வலுப்பெறும் என்பதை தெளிவாக காட்டுகிறது.