அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற படகு சுற்றுலா பயணத்தின் போது, செல்போன் ஆடியோ சத்தத்தை குறைக்கும்படி கூறியதற்கு ஆத்திரமடைந்த ஒரு பெண், இந்திய வம்சாவளியினரைச் சேர்ந்தவர்கள் உட்பட 8 பேர்மீது பெப்பர் ஸ்பிரே தெளித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிவந்துள்ளது.
சான் அன்டோனியோ நகரில் அமைந்துள்ள ‘ரிவர் வாக்’ பகுதியில் பலரும் சேர்ந்து படகு சவாரியில் ஈடுபட்டிருந்தனர். அதில் இந்திய குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், படகில் இருந்த ஒருபெண்ணிடம் அவரது மொபைல் போனின் சத்தத்தை குறைக்குமாறு படகோட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண், படகோட்டியிடம் மோசமாக வார்த்தை பேசி, அதிருப்தி தெரிவித்தார்.
பின்னர், அவரை படகிலிருந்து இறக்குமாறு கூறப்பட்டதும், மேலும் ஆவேசமடைந்த அவர் தனது பையில் இருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து, குழந்தை ஒருவர் உட்பட அங்கு இருந்த 8 பேரின் மேல் தெளித்துவிட்டார்.
தாக்குதலால் அனைவரும் கண்களில் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய பெண் தற்போது ஓட்டம் பிடித்திருப்பதாகவும், அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைக்கிறது.