“அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன்” – இசை மாமேதை இளையராஜா அறிவிப்பு
உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, புதிய சிம்பொனி ஒன்றை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8ஆம் தேதி, லண்டனின் பிரபல ஈவென்டிம் அப்போலோ அரங்கில் “வேலியன்ட்” என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றினார். உலகின் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் நிகழ்த்திய அந்த சிம்பொனி, பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது.
நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு இசைக்கருவிகளில் ஒரே நேரத்தில் இசைத்த அந்த நிகழ்ச்சி, இசை உலகில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. இதன் மூலம், ஆசியாவில் இருந்து சிம்பொனி எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார். இதனால் மொசார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி போன்ற உலக இசை ஜாம்பவான்களின் வரிசையில் அவரது பெயரும் இணைந்தது.
இந்நிலையில், புதிய சிம்பொனி குறித்து தீபாவளி நல்வாழ்த்துகளுடன் இளையராஜா வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
“அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தீபாவளியில் ஒரு சிறப்பு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்.
என் அடுத்த சிம்பொனியை எழுதத் தொடங்க இருக்கிறேன். அதோடு, புதிய இசை படைப்பாக ‘சிம்பொனி டான்சர்ஸ்’ என்ற கோர்வையையும் உருவாக்க உள்ளேன். இதை உங்களுக்கான தீபாவளி பரிசாக கருதுங்கள்,” என தெரிவித்தார்.
இளையராஜாவின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று, சமூக வலைதளங்களில் பெருமளவில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.