தந்தையின் அறிவுரையை மதித்து வேட்புமனுவை தாக்கல் செய்யாத பாஜக அதிருப்தி தலைவர் – பிஹாரில் சுவாரஸ்யம்
பிஹாரின் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அங்கு முக்கிய செல்வாக்கு வாய்ந்தவர். அவரின் மகன் அர்ஜித் சரஸ்வத் சவுபே (43), வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாகல்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக ரோஹித் பாண்டே என்பவர் அறிவிக்கப்பட்டதால், அர்ஜித் அதில் கடும் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, பாஜக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாகவே பாகல்பூரில் போட்டியிடுவேன் என்று அறிவித்தார்.
இதற்காக அவர் அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் பாகல்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு சென்றார். வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, அவரது தந்தை அஸ்வினி குமார் சவுபே அவருக்கு தொலைபேசியில் அழைத்து பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நிருபர்கள் முன்னிலையிலேயே தந்தையுடன் அர்ஜித் பேசியார். அதன் பிறகு, அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யாமல் நேராக வீட்டுக்கு திரும்பினார்.
பின்னர் நிருபர்களிடம் அர்ஜித் கூறியதாவது:
“என் தந்தை தொலைபேசியில் பேசிச் கடுமையான அறிவுரைகள் அளித்தார். பாஜக தலைமையின் உத்தரவை மீறக்கூடாது, கட்சிக்கே நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்றார். அவருடைய சொல்லை மதித்து, நான் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. பாஜக வேட்பாளர் வெற்றி பெற நான் உழைப்பேன்,” என தெரிவித்தார்.
இதனால் பாகல்பூர் பகுதியில் நிலவிய அதிருப்தி நிலைமை தற்காலிகமாக அடங்கியுள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சி நடவடிக்கை
இதே நேரத்தில், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 100 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது. இதில் முதல் கட்டமாக 25 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மேலும், ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் அப்னி ஜனதா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து ஏஐஎம்ஐஎம் இந்தத் தேர்தலில் பங்கேற்கிறது.