அஜர்பைஜான் பாகிஸ்தானிடமிருந்து JF-17 போர் விமானங்களை பெற்றதற்கு பதிலடி கொடுக்க, இந்தியாவின் சுகோய் Su-30MKI போர்விமானங்களை வாங்க ஆர்மீனியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவுடன் ராணுவ தளவாட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள ஆர்மீனியா, அஜர்பைஜானுக்கு எதிராக தன்னுடைய வலிமையை வெளிப்படுத்த முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் போலவே, ஆர்மீனியா – அஜர்பைஜானும் நீண்டகாலமாக எதிர்மறை உறவில் உள்ள நாடுகள். சோவியத் யூனியன் சிதைந்தபின் இரண்டு நாடுகளும் தனித்தனி குடியரசுகளாக உருவானாலும், அதற்கு முன்பே நர்கோனா–கராபாக் பகுதியைச் சுற்றி இருநாடுகளுக்கும் இடையே கடும் பகை நிலவியது.
இந்த பிரதேசத்தின் உரிமை குறித்த முரண்பாடு காரணமாக 1988-லும் பின்னர் 2020-லும் இரு நாடுகளும் ரத்தப் படிவ போரை சந்தித்தன. ஆர்மீனியா பெரும்பாலும் கிறிஸ்துவர் பெரும்பான்மையைக் கொண்ட நாடாகவும், அஜர்பைஜான் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள நாடாகவும் இருப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்துகிறது.
அஜர்பைஜான் எண்ணெய் செழிப்புடன் இருப்பதும், ஆர்மீனியாவுக்கு ரஷ்யாவின் ராணுவ ஆதார நிலையங்கள் இருப்பதும் இரு நாடுகளிலும் ரஷ்யாவை ஒரு தனித்துவமான நிலைக்கு தள்ளியுள்ளது. இரு நாடுகளுடனும் நல்ல உறவைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டிய நிலையில், யாரின் பக்கமும் திறந்தவெளியில் நிற்க ரஷ்யா தயங்குகிறது.
இந்தச் சூழலில், இந்தியாவின் சக்திவாய்ந்த Su-30MKI போர் விமானங்களை வாங்க ஆர்மீனியா விருப்பம் காட்டியுள்ளது. இதற்குக் காரணம் அஜர்பைஜான் பாகிஸ்தானிடமிருந்து 40 JF-17 போர் விமானங்களை பெற்றிருப்பதாகக் கூறப்படும் தகவல். அதற்கு பதிலாக தங்களது வான்படை திறனை உயர்த்துவதற்கும் அஜர்பைஜானை சமநிலைப்படுத்துவதற்கும் ஆர்மீனியா Su-30MKI-க்கு கண் வைத்துள்ளது.
சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், ஆர்மீனியா வரலாற்றிலேயே மிகப் பெரிய ராணுவ தளவாட கொள்முதல் நடவடிக்கையை மேற்கொண்ட நாடாகப் பேசப்படும் என்ற தகவலும் வெளியாகிறது.
சமீபகாலத்தில் ரஷ்யாவின் ஆதரவு குறைந்து வருவதாக எண்ணும் ஆர்மீனியா, 2022 முதல் இந்தியாவில் இருந்து ‘பினாகா’ ராக்கெட்டுகள், ‘ஸ்வாதி’ ரேடார் போன்ற தளவாடங்களை வாங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது Su-30MKI போர் விமானங்களையும் வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுகிறது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரிக்கும் இந்த Su-30MKI விமானங்கள் 2027 முதல் ஆர்மீனியாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 முதல் Astra Mk-2, Mk-3 போன்ற கனரக ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த விமானங்கள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எதிர்காலத்தில் பல நாடுகள் இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.