துபாய் விமானக் கண்காட்சியில் சாகசப் பறப்பில் ஈடுபட்ட தேஜஸ் இலகுரகப் போர்விமானம் (LCA Mk-1) திடீரென கீழே விழுந்து நொறுங்கியதில், 34 வயதான இந்திய வான்படை அதிகாரி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரிவைச் சேர்ந்தோர் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன், தேஜஸ் விமானத்தில் சிரித்தபடி ஏறும் நமன்ஷ் சியாலின் வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், அதற்குள் அவர் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையைச் சாய்ந்து தீப்பற்றி எரிவதும் வைரலானது.
தனது சாகசப் பறப்பைக் குடும்பத்தினரும் நேரலையில் காண வேண்டும் என நமன்ஷ் சியால் கேட்டிருந்ததால், அவரது தந்தை ஜெகன் நாத் சியால் யூடியூப்பில் நேரலை தேடிக்கொண்டிருந்தபோதே விபத்து நடந்த தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மருமகளிடம் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் ஆறு வான்படை அதிகாரிகள் அவர்களைச் சந்தித்து நமன்ஷ் சியால் உயிரிழந்ததை உத்தியோகபூர்வமாக உறுதி செய்தனர்.
சைனிக் பள்ளியில் கல்வி கற்ற அவர், 2009-ல் NDA தேர்வில் வெற்றி பெற்று பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். படிப்பிலும், ஒழுக்கத்திலும், தேச பற்று உணர்விலும் எப்போதும் முன்னிலை வகித்தவர் என்றும் அவரது தந்தை கூறியுள்ளார். தனது தொழில் வாழ்க்கையில் பெரிய இலக்குகளை வைத்திருந்த மகனின் இழப்பு குடும்பத்தை முற்றிலுமாக சீரழித்துவிட்டதாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நமன்ஷ் சியாலின் பெற்றோர் இருவரும் தற்போது கோயம்புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியுள்ளனர். ஏழு வயது பேரக் குழந்தையான ஆர்யாவை கவனிக்க சில வாரங்களுக்கு முன்பே கோவைக்கு வந்திருந்தனர். நமன்ஷின் மனைவி கொல்கத்தாவில் பயிற்சியில் இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது.
இந்த துயரச் சம்பவத்தால், ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாட்டியல்கர் கிராமமே துக்கத்தில் மூழ்கியுள்ளது. இந்திய இராணுவ மருத்துவப் படையில் பணியாற்றிய பின்னர் கல்வித் துறையில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற தந்தை, ஐ.ஏ.எஃப் அதிகாரியான மனைவி, ஆறு வயது மகள் ஆகியோர் உடன் வாழ்ந்த நமன்ஷ் சியால், பதவி உயர்வு பெறவிருந்த நேரத்தில் உயிரிழந்தது மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த இந்திய வான்படை, குடும்பத்தாருக்கு தேவையான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் எனவும், விபத்து காரணத்தைத் தெளிவுபடுத்த விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சம்பவத்திற்குச் சில நொடி முன்பு, விமானி ‘பேரல் ரோல்’ எனப்படும் சுழற்சி சாகச முறையை செய்ய முயன்றதாகவும் தெரிய வருகிறது. இத்தகைய நடவடிக்கை மிகவும் சிக்கலானது அல்ல; ஆனால் சுழற்சிக்குப் பிறகு விமானம் மீண்டும் உயரம் எடுக்க வேண்டிய இடத்தில், அது தரைக்கு மிக அருகில் இருந்திருக்கலாம். மேலும் மீண்டும் உயர பறக்க தேவையான வேகம் போதாமை ஏற்பட்டிருந்தது போலவும் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
எதிர்பாராதபடி தள்ளும் சக்தி குறைந்தது அல்லது கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்பதும் நிபுணர்களின் முன்னாள் மதிப்பீடாக கூறப்படுகிறது.