“இந்திய சினிமா இதுவரை காணாத ஒன்றை உருவாக்கி வருகிறார் அட்லி” – ரன்வீர் சிங் பாராட்டு
இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவுக்கு புதியதொரு படைப்பை இயக்குநர் அட்லி உருவாக்கி வருகிறார் என்று பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாராட்டி தெரிவித்துள்ளார்.
‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப் பொருள் நிறுவனத்தின் விளம்பரப் படத்தை அட்லி இயக்கியுள்ளார். ரூ.150 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த மாபெரும் விளம்பரத்தில் ரன்வீர் சிங் நிறுவனத்தின் ஏஜென்டாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா மற்றும் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர். டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. அதில் அட்லி, ரன்வீர் சிங், பாபி தியோல், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ரன்வீர் சிங், “’ஜவான்’ படம் மூலம் அட்லி இந்தியாவின் முன்னணி இயக்குநராக மாறுவதற்கு முன்பே, நான் அவருடைய ‘மெர்சல்’ படத்தை பார்த்து மிகுந்த விருப்பம் அடைந்தேன். அதற்குப் பிறகு அவருக்கு நீண்ட மெசேஜ் அனுப்பி, ‘சார், உங்கள் சினிமா எனக்கு மிகவும் பிடித்தது. நீங்கள் மும்பைக்கு வாருங்கள்; நாமும் சேர்ந்து சில படங்கள் செய்யலாம்’ என்று கூறியிருந்தேன்.
அட்லி சாருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஒரு கனவு. அவர் பல வருடங்களாக எனக்கு மிக நெருங்கிய நண்பர். அவருடன் நேரம் கழிப்பது எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
“இப்போது என் மனைவி தீபிகா படுகோனே, அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு தளத்துக்குச் சில நேரங்களில் செல்வேன். உண்மையாகச் சொன்னால் — இந்திய சினிமா இதுவரை காணாத, அனுபவிக்காத வகையில் அட்லி ஒன்று உருவாக்கி வருகிறார்” என்றார்.