பல ஆண்டுகளாக, சீன வங்கிகளில் இருந்து கடன் வாங்க வேண்டாம் என்று பிற நாடுகளை எச்சரித்த அமெரிக்கா, இன்று சீனாவிடம் கடன் பெற்ற நாடுகளில் முதலிடத்தில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் வெளிச்சம் பார்க்கின்றன.
சீனா தற்போது உலகின் மிகப்பெரிய சர்வதேச கடன்தாரராக வளர்ந்துள்ளது. ஆப்பிரிக்காவில் நெடுஞ்சாலைகள், தென் அமெரிக்காவில் துறைமுகங்கள், மத்திய ஆசியாவில் ரயில் வழிகள் என உலகின் அனைத்து கண்டங்களிலும் — 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 1 ட்ரில்லியன் டாலருக்கு மேல் கடன் வழங்கியுள்ளது. 30,000-க்கும் அதிகமான சீன திட்ட விவரங்களை ஆய்வு செய்த சர்வே இந்த உண்மையை வெளிப்படுத்துகிறது.
2000 முதல் இன்று வரை, சீன அரசின் நிதி நிறுவனங்கள் உலகம் முழுவதும் மொத்தம் $2.2 ட்ரில்லியன் உதவித் தொகைகளை வழங்கியிருக்கின்றன. அதில் அமெரிக்காவுக்கே கடந்த இருபது ஆண்டுகளில் $200 பில்லியனுக்கும் மேற்பட்ட கடனுதவி கிடைத்துள்ளது என்று AidData ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
அமெரிக்கா முழுவதும் இயற்கை எரிவாயு குழாய்கள், டேட்டா சென்டர்கள், விமான நிலைய கட்டிடங்கள் போன்றவற்றிற்கு சீனா மிகுந்த அளவில் நிதி வழங்கியிருக்கிறது. அதே நேரத்தில் டெஸ்லா, அமேசான், போயிங், டிஸ்னி போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு பின்னணியில் பெருநிதியுதவியைச் சீனா வழங்கியிருப்பதும் அதிர்ச்சியாகும்.
இவை பெரும்பாலும் கண்ணுக்கு தெரியாத கடன்கள்— கேமன் தீவுகள், பெர்முடா, டெலாவேர் போன்ற இடங்களில் பதிவு செய்யப்பட்ட ஷெல் நிறுவனங்கள் வழியாக அமெரிக்காவுக்குப் போய் சேரும் பணப்புழக்கம்.
இக்கடன்களின் முக்கிய நோக்கம்:
அமெரிக்காவின் ரோபாட்டிக்ஸ், செமிகண்டக்டர், பயோடெக் போன்ற தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய துறைகளில் சீன நிறுவனங்கள் பங்கு பெற உதவுவது.
2015-ல் மட்டும் சீன வங்கிகள், முக்கிய அமெரிக்க காப்பீட்டு நிறுவனத்தின் 80% பங்குகளை வாங்க உதவியாக $1.2 பில்லியன் கடன் வழங்கியிருக்கின்றன — அந்த நிறுவன வாடிக்கையாளர்களில் CIA, FBI அதிகாரிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே வருடமே, சீனா தனது “Made in China 2025” திட்டத்தை அறிவித்து, உயர் தொழில்நுட்பத் துறைகளை கைப்பற்றும் இலக்கை நிர்ணயித்தது. இதனுடன், Belt & Road வழியாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு $1 டிரில்லியனுக்கும் மேலான கடன்களை சீனா வழங்கியது.
2016-ல் மட்டுமே, அமெரிக்காவில் ரோபாட்டிக்ஸ் தொழிற்சாலை வாங்குவதற்கு $150 மில்லியன் சீன வங்கிகள் கடனாக கொடுத்தன. எல்லை தாண்டிய நிறுவன வாங்குதல்களுக்கு வழங்கப்பட்ட சீன கடனுகள் ஒரு ஆண்டில் 46% இருந்து 88% வரை உயர்ந்தன.
சீன கடன் வலை உலகமெங்கும்—அமெரிக்கா அதிலேயே அதிகமாக சிக்கிய நாடு!
வளரும் நாடுகள் பல, சீன கடன்களைத் திருப்பித் தர முடியாமல் தடுமாற, அவை ‘அவசர உதவிக் கடன்கள்’ ஆக மாற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சீனா ஏழை நாடுகளுக்கான கடன்களை குறைத்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற உயர் வருமான நாடுகளுக்கு அதிகப்படுத்தியுள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்காவே முதலிடம் பிடித்துள்ளது.
உலக வங்கியின் கணிப்பின்படி:
- சீனா — 4.8% வளர்ச்சி
- அமெரிக்கா — 1.4% பொருளாதாரச் சரிவு
அமெரிக்காவில் உற்பத்தி திறன் குறைந்து, வெளியிலிருந்து இறக்குமதிகளை நம்பியே இருக்கும் நிலை உருவாகியுள்ளது. “உற்பத்தி இல்லாத சந்தை ஒரு உலக சக்தியாக நீடிக்க முடியாது” என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எல்லாவற்றையும் வாங்கும் அமெரிக்கா — ஒன்றையும் தயாரிக்காத பேரரசாக மாறிவிட்டது.
சீனாவுடனான வர்த்தகப் போர் அமெரிக்காவையே அதிகம் காயப்படுத்தியது எனவும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
“ட்ரம்பின் பிடிவாதமும் குறைந்த பொருளாதார அறிவும், அமெரிக்காவில் எஞ்சியிருக்கும் போட்டித் திறனை முழுமையாக அழித்துவிடும்” என்றும் புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.