திரைப்படங்களை அதிக தொகையில் வாங்கும் பழக்கத்திலிருந்து விலகி, இனி வெப் சீரிஸ் மற்றும் சொந்தமாக உருவாக்கப்படும் ஒரிஜினல் உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க Netflix எடுத்துள்ள புதிய முடிவு, திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் காலத்தில் பார்வையாளர்களை தக்கவைக்க OTT தளங்கள், படங்களை முன்பு இல்லாத அளவிற்கு உயர்ந்த விலையில் பெற்றன. இது தயாரிப்பாளர்களுக்கு உடனடியான வருமானத்தை வழங்கினாலும், திரைப்பட சந்தையில் பல எதிர்மறை விளைவுகளை உருவாக்கியது.
நடிகர்களின் கூலி, பட்ஜெட் ஆகியவை கணிசமாக உயர்ந்ததுடன், தியேட்டர் மற்றும் டிவி ஒளிப்பரப்பு உரிமைகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. அதே சமயம், மிக உயர்ந்த விலைக்கு வாங்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்கில் தோல்வி அடைந்ததால், OTT தளங்களும் தேவையான பார்வையாளர்களை ஈர்க்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.
இந்த இழப்புகளுக்குப் பிறகு, OTT நிறுவனங்கள் படங்களை வாங்கும் விதிமுறைகளை கடுமையாக்கி, சொந்த தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. பல கட்டுப்பாடுகளும் புதுக் கோரிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஹைதராபாத்தில் புதிய பெரிய அலுவலகத்தை தொடங்கிய Netflix, வெளியாண தயாரிப்பாளர்களிடம் இருந்து மிகுந்த தொகையிலான படங்களை வாங்குவதை குறைத்து, தாமே வெப் தொடர்கள் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பல படங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்த Netflix-ன் இந்தத் திசை மாற்றம், பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் லாபத்துக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
மேலும், நட்சத்திர கவர்ச்சி அல்லது எதிர்பார்ப்பு மட்டும் போதாது; தரமான கதை, நம்பகமான படைப்பு ஆகியவற்றை வழங்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இனி துறையில் நீடித்து செயல்பட முடியும் என்ற புதிய சூழல் உருவாகியுள்ளது.