பீகாரைச் சேர்ந்த 25 வயது நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர், பாஜக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இளம் வயதிலேயே அவர் பெற்றுள்ள புகழும் சாதனைகளும் குறித்து இந்த செய்தி விரிவாகப் பார்க்கிறது.
பீகாரின் மதுபனி மாவட்டம் பெனிபட்டியைச் சேர்ந்த மைதிலி, சிறு வயதிலேயே இசையில் காட்டிய ஆர்வத்தை உணர்ந்த அவரது பெற்றோர், சிறந்த பயிற்சிக்காக டெல்லிக்கு மாற்றம் ஆனார்கள். டெல்லி துவாரகாவில் உள்ள பால் பவன் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி கற்ற அவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆத்ம ராம் சனாதன தர்மம் கல்லூரியில் இசைப் படிப்பை முடித்தார்.
பின்னர் தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து போஜ்புரி நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், செல்லும் இடமெல்லாம் மக்களின் பாராட்டைப் பெற்றார். அவரது குரல் மற்றும் திறமைக்கு, இசை நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவா புரஸ்கார் உள்ளிட்ட பல பரிசுகள் கிடைத்தன.
சமூக சேவையில் ஆர்வம் காரணமாக பாஜகவில் இணைந்த மைதிலிக்கு, அலிநகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் வயதிலும் திறமைசாலி என நம்பிய பாஜக தலைமையகம் அவரை வேட்பாளராக அறிவித்தது.
மலர் ஓவியமாக பரவலாக அறியப்படும் மிதிலா ஓவியத்தை பள்ளிகளில் பாடத்திட்டமாக சேர்ப்பேன், அலிநகரை சீதாநகர் என மறுபெயரிடுவேன், பெண்களின் கல்வி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக பாடுபடுவேன் என அவர் கூறிய வாக்குறுதிகள் வாக்காளர்களை கவர்ந்தன. இதன் விளைவாக, பல கருத்துக்கணிப்புகள் மைதிலி தாக்கூர் வெற்றி பெறுவார் என்று முன்கூட்டியே குறிப்பிட்டன.
அப்படியே, ஆர்ஜேடி வேட்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான பினோத் மிஸ்ராவை 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு, மைதிலி தாக்கூர் தனது முதல் அரசியல் வெற்றியைப் பெற்றார். இதன்மூலம், 26 வயதில் வெற்றி பெற்ற தவுசிப் அலம் மற்றும் தேஜஸ்வி யாதவின் சாதனைகளையும் அவர் மீறியுள்ளார்.
இதற்கிடையில், மைதிலியின் இசை தொடர்பான பழைய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன், விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடலை அவர் இனிமையாக பாடிய வீடியோ தற்போது மீண்டும் டிரெண்டாகிறது.
இவ்வாறு இசை உலகிலிருந்து அரசியல் துறைக்குப் பயணம் தொடங்கியுள்ள மைதிலி தாக்கூர், தனது புதிய முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள் பெருகி வருகின்றன.