2027–ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வடிவமைப்பு நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டு இறக்குமதியை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், உள்நாட்டு உற்பத்தியை துரிதப்படுத்தும் நோக்கிலும், அரசு விரிவான சுதேசி உற்பத்தி கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்த எண்ணிக் கொண்டிருக்கிறது.
உலகளாவிய வர்த்தக மாற்றங்களால் நிலைமைகள் கணிக்க முடியாத சூழலில் மாறி வரும் நிலையில், இந்தியா வெளிநாட்டுப் பொருட்களை சார்ந்திருப்பதை குறைப்பது அவசியமாகியுள்ளது. இதற்காகவே சுதேசி உற்பத்தியை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து பல்வேறு அமைச்சகங்கள் ஆலோசனைகளை தொடங்கியுள்ளன.
வரும் பட்ஜெட்டில், சுதேசி முயற்சிகளை ஊக்குவிக்கும் புதிய கொள்கைகள் மற்றும் ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50% வரைவரி விதித்த காலகட்டத்தில், உள்நாட்டு உற்பத்தியை விரிவாக்குவது தொடர்பான கோரிக்கை மேலும் வலுத்துள்ளது.
அதே நேரத்தில், அரிய பூமி காந்தங்கள் (Rare earth magnets) போன்ற முக்கிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது சவாலாகி வருகிறது. சீனா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியிருப்பதே இதற்குக் காரணம்.
மேலும், அமெரிக்காவின் வரி கொள்கையால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல பொருளாதாரங்களும் இந்தியாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) குறித்து கலந்துரையாடி வருகின்றன.
சமீபத்தில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
- இந்தியாத் தொழில்துறை உள்நாட்டு உற்பத்தி மையமாக மாற வேண்டும்
- திறன் மற்றும் தொழில்நுட்ப இடைவெளிகள் காரணமாக சில பொருட்களை இன்னும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது
- உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்
- ஒரே நாடு அல்லது விநியோகஸ்தரை அதிகமாக சார்ந்து இருப்பது ஆபத்தானது
அவர் மேலும், முக்கியமான பொருட்களுக்கு வெளிநாட்டு சார்பை குறைத்து, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவது தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இத்தனைக்கும் மேலாக, ஏற்கனவே பிரதமர் மோடி ‘சுதேசி’ நெளிவழியை வலுப்படுத்தி வருவதால், நாடு முழுவதும் சுதேசி அலை வேகமாகப் பரவி வருகிறது.
வரும் பட்ஜெட்டில் இந்த முயற்சிக்கு கூடுதல் ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டால்,
சுதேசி உற்பத்தி கொள்கை நாடு முழுவதும் இன்னும் பலத்துப் பதியக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.