சீனாவின் அசைவுகளை கண்காணிக்கும் நோக்கில், உலகின் மிக உயர்ந்த செயல்படும் விமானப்படை தளமாகக் கருதப்படும் நியோமா ஏர்பேஸ் இந்தியாவால் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட இந்த தளம், அதிநவீன ராணுவத் தேவைகளுக்கான முக்கிய கட்டமைப்பாகும். இது குறித்து இப்போது விரிவாக பார்ப்போம்.
2020 கல்வான் மோதலுக்குப் பின் இந்தியா–சீனா உறவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்ததை அடுத்து உறவு சற்று சீரானது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான விமான சேவைகளும் மீண்டும் தொடங்கின.
ஆனால், ராணுவ ரீதியாக எப்போதும் நுட்பமான செயல்பாடுகளை நடத்தும் சீனாவை இந்தியா கவனமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், கிழக்கு லடாக்கில் நியோமா விமானப்படை தளம் உருவாக்கப்பட்டு தற்போது முழுமையான செயல்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையில், லடாக் எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் சீனா பெரிய அளவில் ராணுவ விமானத்தளங்களை மேம்படுத்தி வருகிறது.
கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் சீனா உருவாக்கும் புதிய விமான தளத்தின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. வீரர்கள் தங்கும் முகாம், வெடிமருந்து கிடங்குகள், ஏவுகணை தளங்கள், ரேடார் அமைப்புகள் போன்ற அனைத்தும் அதிநவீன முறையில் அங்கு நிறுவப்படுகின்றன.
மேலும், திபெத்தின் கர் பவுண்டி பிரதேசத்தில் இன்னொரு ஏவுகணை தளம் அமைக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஹோடான், காஷ்கர், கர்குன்சா, ஷிகாட்சே, பாங்டா, யிங்சி போன்ற சீனாவின் முக்கிய ராணுவ விமானத் தளங்களிலும் போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், உளவு நடவடிக்கைகளுக்கான ட்ரோன் ஆபரேஷன் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், சீனாவுக்கு அருகே சர்வதேச எல்லைக்கோட்டில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நியோமா விமானப்படை தளம் இந்தியாவால் மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 230 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த தளத்தை விமானப்படை தளபதி ஏ.பி. சிங் திறந்து வைத்தார்.
போர் நிலை ஏற்பட்டால் போர் விமானங்கள் எளிதாக தரையிறங்க 2.7 கி.மீ. நீளம் கொண்ட வலுவான ஓடுபாதை இந்த தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பல உள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதால், நியோமா தளம் இந்திய ராணுவத்தின் திறனை கணிசமாக உயர்த்துகிறது.
ராணுவப் படைகள் மற்றும் ஆயுதங்களை வேகமாக கொண்டு செல்லும் திறன் அதிகரிக்கப்பட்டதால், பாங்காங் சோ, டெம்சோக், டெஸ்பாங் போன்ற கிழக்கு லடாக்கின் நுணுக்கமான இடங்களுக்கு நேரடியாக இங்கிருந்து படைகளை நகர்த்த முடியும்.
லே, கார்கில், டவுலத் பெக் ஓல்டி போன்ற முக்கிய தளங்களுக்கு இணையாக நியோமா ஏர்பேஸ் செயல்பட தொடங்கியுள்ளதால், சீனாவுக்கு எதிராக இந்தியா வல்லமைசாலியான பதிலை வெளிப்படுத்தியுள்ளது என ராணுவ வட்டாரங்கள் பெருமையுடன் தெரிவிக்கின்றன.