எந்த வகையான நிலத்தையும் எளிதில் கடக்கக்கூடிய முன்னேற்றமான BvS-10 ராணுவ வாகனங்கள் விரைவில் இந்திய தரைப்படைக்கு பெரிய ஆதரவாக வர உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த கவச வாகனங்கள் மிகச் சீக்கிரம் நாட்டின் எல்லை பாதுகாப்பில் பயன்படுத்தப்படத் தொடங்கும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மலைப்பாங்கான பகுதிகள், சதுப்பு நிலங்கள் போன்ற சவாலை ஏற்படுத்தும் சூழல்களில் கூட விரைந்து முன்னேறக்கூடிய வகையில், BAE Systems என்ற பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து இந்தியா இந்த BvS-10 கவச வாகனங்களைப் பெற முடிவு செய்துள்ளது. தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், இந்த வாகனங்கள் Larsen & Toubro நிறுவனத்தின் வசம் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
மொத்தம் 18 BvS-10 வாகனங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை தாங்கள் பெற்றுள்ளோம் என்று Larsen & Toubro நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் படி, ஆரம்பத்தில் BAE Systems நிறுவனத்தில் இருந்து அனைத்துநிலப்பரப்பிலும் இயங்கக்கூடிய BvS-10 வாகனங்கள் இந்திய ராணுவத்திற்காக வாங்கப்படுகின்றன; பின்னர் அவை L&T நிறுவனத்தால் இந்திய உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும்.
இந்த வாகனங்கள் இந்திய ராணுவத்தில் சேரும் போது இவை “சிந்து” என்று அழைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் நடத்தப்பட்ட BvS-10 சோதனைகள் முழுமையாக வெற்றி பெற்றதாக BAE Systems நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் டேரன் ரெஸ்டாரிக் உறுதிப்படுத்தினார்.
ஆனால், இந்த வாகனங்களுக்கான ஒப்பந்த தொகை பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ஆஸ்திரியா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் உக்ரைன் நாடுகளில் BvS-10 சேவையில் உள்ள நிலையில், ஜெர்மனியும் விரைவில் இந்த பட்டியலில் சேர இருக்கிறது.
மலைப் பகுதிகள் முதல் சதுப்பு நிலங்கள் வரை உள்ள கடினமான நிலப்பரப்புகளில் பயன்படுத்த இந்திய ராணுவம் BvS-10 “சிந்து” வாகனங்களை கொண்டு வர உள்ளதாக Breaking Defence தெரிவித்துள்ளது. இந்த 18 வாகனங்களும் வீரர்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வாகனங்களாக இருக்கும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், படைத்தளபாடங்கள் மற்றும் வீரர்களை எடுத்துச் செல்வதற்கு மட்டும் அல்லாமல், ஆம்புலன்ஸ், மீட்பு வாகனம், தளவாட போக்குவரத்து போன்ற பல்வேறு பணிகளுக்கும் இந்த வாகனங்கள் ஏற்றதாக பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறுகின்றனர். “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் உருவாகும் இந்த BvS-10 வாகனங்கள் இந்திய ராணுவத்திற்கு கூடுதல் வலிமையை வழங்கும் என்பது எதிர்பார்ப்பு.