‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் உலக வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தற்போது நடிகர் மகேஷ் பாபுவை நடிக்க வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் இந்திய திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில், பிருத்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்திலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராஜமௌலி முன்னரே இதுவொரு உலகளவிலான ஆக்ஷன் – அட்வென்சர் திரைப்படம், ஹாலிவுட்டின் ‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணியில் உருவாகி வருவதாக கூறியிருந்தார். கதையின் முக்கிய பகுதிகள் காசி (வாரணாசி) எனப்படும் புனித நகரத்தை மையமாகக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் ஹனுமனை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இப்படத்தின் கதைப் பணிகள் மற்றும் கேரக்டர் டிசைன்களை பற்றி ராஜமௌலியின் தந்தை மற்றும் பிரபல எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் முன்பே பகிர்ந்திருந்தார்.
படத்தின் பெரும்பாலான ஆக்ஷன் காட்சிகள் கென்யாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. கென்யாவில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு காட்சிகள், கடந்த செப்டம்பர் மாதம் இணையத்தில் கசிந்ததால் ரசிகர்களிடம் மேலும் ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தற்போது, இந்தப் படத்தின் டையிட்டில் ‘வாரணாசி’ எனப்படும் பெயர் அதிகாரபூர்வமற்ற முறையில் பரவி வருகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.