ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. இதில் தனுஷ் ‘சங்கர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் ‘முக்தி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு உலக இசை நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வரும் நவம்பர் 28-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இதையொட்டி, மும்பையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர். படம் காதல் கதையை மையமாக கொண்டிருப்பதால், ஊடகங்கள் தனுஷ் மற்றும் கீர்த்தி சனோனிடம் காதல் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பின.
அப்போது தனுஷ் சிரித்தபடி பதிலளித்தார்:
– “காதல் என்பது மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி. அதைப் பற்றி இப்போது பேசினால் தலைப்புகளாகி விடும்!” என்று நகைச்சுவையாகக் கூறிய அவர், காதலைப் பற்றிய தனது பார்வை எளிமையானதுதான் என்றும் விளக்கினார்.
கீர்த்தி சனோன் கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து, இப்படம் காதல் மட்டுமல்ல; உணர்ச்சிகள், மனித உறவுகள், வலிமையான கதாபாத்திரங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
டிரெய்லர் வெளியீட்டின் பின்னர், படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசை, ஆனந்த் எல். ராய் இயக்கம், தனுஷ்–கீர்த்தி கூட்டணி ஆகியவை காரணமாக ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.