பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என சமநிலையிலேயே முடித்தது. அந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிய 39 விக்கெட்களில் 35-ஐ கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி ஆகியோரால் ஆன சுழற்பந்து பிரிவு எடுத்திருந்தது. அதே சமயம், பாகிஸ்தான் மண்ணில் விளையாடிய நோமன் அலி, சஜித் கான், ஆசிப் அப்ரிடி உள்ளிட்ட உள்ளூர் சுழற்பந்து வீரர்கள் சேர்ந்தே 27 விக்கெட்களையே பெற்றனர். இதனால், தென் ஆப்பிரிக்காவின் ஸ்பின் அணியின் திறமையை அந்தத் தொடரே வெளிக்காட்டியது.
36 வயதான சைமன் ஹார்மர், முதல்தரப் போட்டிகளில் ஆயிரம் விக்கெட்களை வீழ்த்திய அனுபவம் மிகுந்த வீரர். இந்திய அணிக்குப் பரிச்சயமில்லாதவர் அல்ல;
2015 ஆம் ஆண்டு இந்தியா விஜயத்தில் மொகாலி மற்றும் நாக்பூர் டெஸ்டில் அவர் விளையாடியிருந்தார். அப்போது சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா ஆகியோரின் விக்கெட்களையும் அவர் வீழ்த்தினார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்திய நிலத்தில் களமிறங்க உள்ளார். கடந்த மாதம் ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் எட்டு விக்கெட்களை பிடித்து தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்திருந்தார்.