“நம் மீது வெளியே பாய்ந்தாலும் உள்ளே பாராட்டுவர்” – ஆஸ்திரேலியர் குறித்து விராட் கோலி மனம் திறப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தற்போது தனது கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் குணாதிசயங்களைப் பற்றிய அனுபவங்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
பெர்த் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மழை காரணமாக சிரமப்பட்டு தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் கோலி தவறான ஷாட்டில் அவுட் ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதையடுத்து ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கோலி கூறியதாவது:
“ஆஸ்திரேலியாவில் மீண்டும் விளையாடுவது எப்போதும் ஒரு மகிழ்ச்சி. இங்கு என் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ஆடியுள்ளேன். இங்கே போட்டிகள் கடினமானவை, ஆனால் அதுவே என்னை வலுவான வீரனாக மாற்றியது.
ஆஸ்திரேலியர்கள் நேரடியாக முகத்திற்கு எதிராகப் பேசுவார்கள், போட்டித்தன்மையுடன் சவால் விடுப்பார்கள். ஆனால் நல்ல கிரிக்கெட் ஆடியால் அவர்கள் உள்மனதில் நம்மை மரியாதை செய்யும் பண்புடையவர்கள். அவர்கள் நம்மீது வெளியே பாய்ந்தாலும் உள்ளுக்குள் பாராட்டுவார்கள்.”
கோலி மேலும் கூறினார்:
“சிறு வயதில் ஆஸ்திரேலிய சம்மர் டெஸ்ட் போட்டிகளைப் பார்த்து வளர்ந்தேன். அந்த பிட்சுகளில் பந்துகள் எகிறுவது, ஆட்டத்தின் தீவிரம் – இவை அனைத்தும் என்னை ஊக்கப்படுத்தின. ஒருநாள் அந்த நாட்டில் விளையாட வேண்டும் என்ற கனவையே அந்த நேரத்தில் நான் கண்டேன்.
கெவின் பீட்டர்சன் எனக்குக் கூறிய ஒரு அறிவுரை என் மனதில் நிறைந்துள்ளது – ‘ஆஸ்திரேலியர்கள் உன்னைக் கடுமையாக சவால் விடுப்பார்கள், ஆனால் நம்மை மனதார பாராட்டுவார்கள்.’ அந்த வார்த்தைகள்தான் இங்கே எனது அணுகுமுறையை மாற்றியது,” என்றார் கோலி.
கோலி மேலும் குறிப்பிட்டதாவது:
“ஆஸ்திரேலிய ரசிகர்கள் எப்போதும் எனக்கு சவாலை அளித்தவர்கள்தான். ஆனால் அதுவே என்னை இன்னும் சிறந்த வீரனாக உருவாக்கியது. அவர்கள் எதிர்கொண்டு ஆரவாரம் செய்ததே எனக்குள் உள்ள ஆற்றலை வெளிப்படுத்த உதவியது.”