பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியுவின் வெற்றி பெண்களுக்கான ரூ.10,000 நிதி உதவித் திட்டத்தால் மட்டுமே ஏற்பட்டது; அந்தத் தொகை வழங்கப்படாமல் இருந்திருந்தால், அந்தக் கட்சி 25 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற முடியாது என்று ஜன சுராஜ் கட்சி நிறுவனர் மற்றும் தேர்தல் தந்திர நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், பாட்னாவில் ஊடகங்களிடம் பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். தேர்தலுக்கு முன் அவர் கூறிய, “ஜேடியு 25 இடங்களைத் தாண்டி வெற்றி பெறாது” என்ற கருத்தை குறித்து செய்தியாளர்கள் வினவினர்.
இதற்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
“முதல்வர் அறிவித்த பெண்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சுமார் 60,000 பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1.5 கோடி பெண்கள் சுயதொழில் ஆரம்பிக்க இந்த உதவித் தொகை பெற்றனர். மேலும், எதிர்காலத்தில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் தாக்கமே ஜேடியு வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த நிதி உதவி வழங்கப்படாதிருந்தால், அவர்கள் 25 தொகுதிகளைத் தாண்டிச் சாதனை படைத்திருக்காது,” என்றார்.