தன்னுடைய பழைய பாடல்கள் புதிய திரைப்படங்களில் பயன்படுத்தப்படும்போது காப்புரிமை கோராததற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா விளக்கமாக கூறியுள்ளார்.
கரூரில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது அவர் கூறியது:
“நான் எந்த பாடலுக்கும் காப்புரிமை கேட்பதில்லை. அதை கேட்கத் தொடங்கினால் அந்த விஷயம் நீள்ந்து பெரிய சிக்கலாக மாறிவிடும். ஒரு சம்பவம் சொல்கிறேன்… ஒருநாள் ஒரு மாலிற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் தந்தையுடன் வந்திருந்தான். அந்த அப்பா, ‘உனக்கு பிடித்த கரு கரு கருப்பாயி பாடல் தெரியுங்க? அதை உருவாக்கியது இவர்தான்’ என்று என்னைக் காட்டினார். உடனே அந்த பையன் மகிழ்ச்சியுடன் என்னிடம் கைகொடுத்தான். இப்படிப் பட்ட சிறு குழந்தைகளுக்குக் கூட என் பாடல்கள் தெரியும் என்பதுதான் நான் காப்புரிமை பற்றி பேசாததற்கான முக்கிய காரணம்,” என்று தேவா கூறினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் தேவாவின் இசையில் உருவான கரு கரு கருப்பாயி பாடல் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அந்த பாடல் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல வாழை, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் ‘பஞ்சுமிட்டாய் சேலைகட்டி’ பாடலும் பயன்படுத்தப்பட்டு இணையத்தில் வைரலானது.