இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி அனுமனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக, பல இந்து அமைப்புகள் போலீசில் புகார்கள் அளித்துள்ளன.
மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்துக்காக ‘குளோப் ட்ரோட்டர்’ என்ற சிறப்பு சாகச உலகத்தைக் குழுவினர் உருவாக்கி, அதற்கான அறிமுக விழாவை நவம்பர் 15 அன்று ஹைதராபாத்தில் நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் படத்தின் தலைப்பும், அறிமுக டீசரும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய ராஜமவுலி,
“எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா எப்போதும் அனுமன் எங்களைப் பார்த்துக்கொள்கிறார் என்று கூறுவார். ஆனால் அவர் உண்மையில் கவனிக்கிறாரா என எனக்குள் சந்தேகம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மீது மிகுந்த பற்று. அவர் அனுமனை நண்பரைப்போல் பேசுவார். என் அப்பா அனுமன் ஆசீர்வாதத்தில் படத்தின் வெற்றியை நம்பச் சொன்னபோது எனக்கு அதிக கோபம் ஏற்பட்டது,”
என்று குறிப்பிட்டார்.
இந்த உரை நிகழ்வில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இருந்தாலும், அது சமூக வலைதளங்களில் சர்ச்சையை உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து ராஷ்ட்ரியா வானர சேனா, கவுரக்ஷக் சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புகள், ராஜமவுலி வேண்டுமென்றே இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் பேசி, மத வெறுப்பை தூண்டியதாகக் கூறி ஹைதராபாத் சரூர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.