டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைச் சுற்றியுள்ள விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
குண்டுவெடிப்பை நடத்தும் நோக்கில் சதிகாரர்கள் நேபாளத்தில் இருந்து ஏழு பழைய மொபைல் போன்களை வாங்கியுள்ளனர். அதனுடன், மொத்தம் 17 சிம் கார்டுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 6 சிம் கார்டுகள் உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூரில் வாங்கப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது.
குண்டுவெடிப்பை மேற்கொண்ட உமர் நபியுடன், வெடிப்பு நிகழ்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வரையில் மூவர் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் பர்வேஸ், முகமது ஆரிப், பரூக் அகமது தார் என்ற மூன்று மருத்துவர்கள்.
இந்த மூவரில் பர்வேஸ் என்பவர், வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஷாகின் சயீதின் சகோதரர். தற்போது அவர் லக்னோவிலுள்ள இன்டெக்ரல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
மற்றொருவரான முகமது ஆரிப், கான்பூர் ஜிஎஸ்விஎம் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல் ஆண்டு டிஎம் (இதயவியல்) பயிலும் மாணவர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை காவலில் எடுக்கப்பட்டார். மூன்றாவது நபரான பரூக் அகமது தார் ஜி.எஸ். மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்புக்கான திட்டம் அக்டோபர் 2 ஆம் தேதி உமர் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 28 ஆம் தேதி அவர் இறுதி திட்டத்தை உறுதிப்படுத்தியதாகவும் விசாரணை வட்டாரங்கள் கூறின.