கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதால், தென் ஆப்பிரிக்கா தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன் ஆற்றல் கொண்டவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்தது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் தனது அதிகாரத்தை மீறி செயல் படுவதாகவும், அப்படி தொடர்ந்தால் அணிக்கே ஆபத்து என்றும் பிசிசிஐ மற்றும் முன்னாள் வீரர்கள் எச்சரிக்கப்பட வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பெங்களூருவில் நியூஸிலாந்துக்கு எதிராக மிக அதிக வேகம், ஆட்டக்களம் போல் அமைக்கப்பட்ட பிட்சில் விளையாடிய இந்திய அணி 49 ரன்களுக்கு சரிந்தது அனைவருக்கும் தெரியும். அந்த தோல்விக்குப் பின்னரும், “எனக்கு முதல் பந்திலிருந்தே ஸ்பின் ஆகும் பிட்ச் வேண்டும்” என்ற கருத்திலேயே கம்பீர் உறுதியுடன் இருந்ததாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த பிட்சில் 0–3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தோம்; அஸ்வினுக்கே விக்கெட் எடுக்க முடியவில்லை; ஆனால் சாதாரணமாக டெஸ்ட் கூட அதிகம் ஆடாத சாண்ட்னர் இந்திய அணியை எளிதாகச் சுருட்டினார்.
இப்போது கொல்கத்தா போட்டிக்காகவும் “பிட்சில் தண்ணீர் ஊற்ற வேண்டாம், வறண்டதாகவும் அதிகமாக திரும்புவதற்கானதாகவும் வைத்து தருங்கள்” என்று கேட்டதாக கம்பீர் அவரே ஒப்புக் கொண்டார். ஆட்டம் முடிந்ததும், “நாங்கள் கேட்டபடி பிட்ச் இருந்தது. 124 ரன்களைத் துரத்துவது கடினம் அல்ல. தலையை குனிந்து ஆடினால் இந்த பிட்ச்சிலும் ரன்கள் எடுக்க முடியும்” என்று தனது முடிவுகளை நியாயப்படுத்தினார்.
ஆனால் உண்மை என்னவென்றால் — எந்த அணியும் 200 ரன்களையும் கடக்க முடியவில்லை. இந்திய அணிக்கே 2வது இன்னிங்ஸில் 100 ரன்கள் கூட ஏறவில்லை. இருந்தும், “இதே பிட்ச் கேட்டோம்” என்கிறார் கம்பீர்.
கேப்டன்–பயிற்சியாளர் தகவல் இடைவெளி
போட்டித் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிட்ச் வறண்டு கிடப்பதை பார்த்த கேப்டன் ஷுப்மன் கில் அதிருப்தி தெரிவித்துள்ளார். கங்குலியும் எந்த தெளிவான விளக்கமும் தரவில்லை. அப்போது கம்பீர் நேரடியாக, “இது நான் கேட்ட பிட்ச் தான்” என்று ஏன் சொல்லவில்லை? என்ற கேள்வி எழுகின்றது.
அணி அமைப்பு, டாஸ் முடிவுகள், பவுலிங் ஒதுக்கீடு, கள அமைப்பு—எல்லாமும் முழுவதும் கம்பீரின் கட்டுப்பாட்டில் சென்றதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதனால் இந்த தோல்விக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஸ்பின் திட்டத்தில் குழப்பம்
சைமன் ஹார்மர் என்ற ஆஃப்-ஸ்பின்னர் இந்திய பேட்டிங்கை நசுக்கியபோது, இந்திய ஸ்பின்னர்கள் எதுவும் செய்ய முடியாமல் போனது கவலைக்குரியது. அஸ்வின் இல்லாத இடத்தை நிரப்ப வந்த வாஷிங்டன் சுந்தருக்கு வெறும் ஒரு ஓவர் மட்டுமே அளித்த அணித் திட்டம் அதிகமான கேள்விகளை எழுப்புகிறது.
இதோடு, ஜெய்ஸ்வாலின் தன்னம்பிக்கையை பாதிக்கும் வகையில் டி20, ஒருநாள் அணிகளில் இடம் மறுக்கப்பட்டது. இதே நிலை ராகுலுக்கும் ஏற்பட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சாய் சுதர்ஷனை நீக்கி சுந்தரை சேர்ப்பதும் அணி சமநிலையை பாதித்ததாகவும் குற்றச்சாட்டுகள்.
இத்தனை தவறுகளுக்கும் பிறகும் கம்பீர் மீது கேள்வி எழுப்ப யாரும் முன்வராதது கவலைக்குரியது. அணியின் பலத்திற்கேற்ற பிட்ச் அமைப்பதே வழக்கம்; ஆனால் இப்போது அணியின் பலவீனங்களை மேலும் வெளிப்படுத்தும் பிட்ச்களையே கேட்கும் பயிற்சியாளர் உருவாகியுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன.
இந்த அசம்பாவிதமாக வளர்ந்து வரும் நிலைக்கு மாற்றம் தேவை. அதுவே இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க்கும்.