மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் தலைமையில் பக்தர்கள் புனித நீராடினர். புராணங்களின் படி, பக்தர்கள் புனித நீராடியதால் கங்கை மற்றும் காவிரி போன்ற ஜீவநதிகள் கருமை நிறத்திலிருந்து சுத்தமாகி, சிவனை வழிபட்டு பாவங்களைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உற்சவம் நடைபெறும் வழக்கம் உள்ளது. நடப்பாண்டு அக்.18-ஆம் தேதி தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கியது. நேற்று மதியம் 2.30 மணியளவில் கடைமுக தீர்த்தவாரி சிறப்புடன் நடைபெற்றது.
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தெப்பக்குளம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், படித்துறை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களில் இருந்து சுவாமி மற்றும் அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக்கட்ட காவிரி தென் கரையில் எழுந்தருளினர்.
அதேபோல், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு காவிரி வடக்கு கரையில் எழுந்தருளினர்.
அபிஷேகம் மற்றும் ஆராதனைகள்
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தெற்கு கரையில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் வடக்கு கரையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நிறைவு பெற்றது.
அப்போது ஆதீனகர்த்தர்கள் மற்றும் காவிரி ஆற்றின் இருபுறமும் கூடிய ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான்கள், பக்தர்கள் அனைரும் இந்த தீர்த்தவாரியில் கலந்துகொண்டனர்.