அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்ததனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் தொழில் துறையில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளன. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்து, இந்த சலுகைகளை நூற்பாலைகள், விசைத்தறி மற்றும் சாயாலைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி விதிக்க உத்தரவிட்டதன் விளைவாக, இந்திய ஜவுளி ஏற்றுமதி முக்கியத்துவமான இழப்பை சந்தித்தது. மூன்று மாதங்களாக இந்த வரி நடைமுறையில் இருந்ததால், நாட்டின் ஜவுளித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை தணிக்க மத்திய அரசின் தலையீட்டை பல தொழில் அமைப்புகள் தொடர்ந்து கோரி வந்தன.
அந்தக் கோரிக்கைக்கு இணங்க, இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சைமா தலைவர் துரை. பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் ஜவுளிப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த இந்தியத் தயாரிப்பாளர்களுக்கு, அமெரிக்கா திடீரென விதித்த 50% வரி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல ஜவுளி ஆலைகள் வரலாற்றில் முதல்முறையாக உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தற்காலிக வேலை இழப்பு நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், கடன் மற்றும் வட்டியை செலுத்தும் திறனும் குறைந்தது.
இந்த நெருக்கடியை சமாளிக்க, கடன் திருப்பிச் செலுத்த ஓராண்டு அவகாசம், 30% கூடுதல் கடன் வசதி, ஏற்றுமதி ஊக்கத்தொகை போன்ற உதவிகளை தொழில் துறையினர் கோரினர்.
இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டிக்கு கால அவகாசம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இது ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தற்காலிக நிதி சிக்கலைத் தீர்க்க உதவும்.
இந்த நிவாரண அறிவிப்புக்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், கிரிராஜ் சிங் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இதே சலுகையை நூற்பாலைகள், விசைத்தறி மற்றும் சாயாலைகளுக்கும் விரிவுபடுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.”
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.