பிஹார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சி முன்வைத்த புகாருக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் வழங்கியுள்ளது.
ஆணையம் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வெளியிட்ட தகவலில், பிஹாரில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என அறிவித்தது. ஆனால் தேர்தல் முடிந்தபின், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.45 கோடி என திருத்தப்பட்டதால், காங்கிரஸ் இந்த முரண்பாட்டை முகநூல் பதிவில் கடுமையாக விமர்சித்தது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“தேர்தல் சட்டப்படி, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கடைசி தேதிக்கு 10 நாட்களுக்கு முன்புவரை புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் படி அக்டோபர் 1ஆம் தேதி வரை வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இதனால் கூடுதலாக 3 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.
இதே காரணத்தால், தேர்தல் முடிந்தபின் வெளியிடப்பட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என அவர்கள் தெளிவுபடுத்தினர்.