மண்டல வழிபாடு தொடங்கும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் “சுவாமியே சரணம் அய்யப்பா” என்று முழங்கியபடி தர்மசாஸ்தாவை பக்திவெள்ளத்தில் வழிபட்டனர்.
டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு, இன்று (நவம்பர் 16) மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் ஏற்றி கோயில் நடையைத் திறந்தார். பின்னர் 18-ம் படிக்குச் சென்று ஆழிக்குண்டத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரூவுடன் பூஜை நடைபெற்றது.
மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய மேல்சாந்திகளாக நியமிக்கப்பட்ட பிரசாத் நம்பூதிரி மற்றும் மனு நம்பூதிரியை அவரின் கைபிடியில் கொண்டு 18-ம் படி வழியே சந்நிதானத்துக்கு அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் விபூதி வழங்கப்பட்டு, தந்திரி புனித தீர்த்தம் தெளித்து மூலமந்திரத்தைச் செவிமடுக்கச் செய்து பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. புதிய மேல்சாந்திகள் ஓராண்டுக்குப் பொறுப்பேற்று சபரிமலையில் தங்கியிருந்து வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளனர்.
பதவியேற்புக்குப் பிறகு, வழக்கமான பூஜைகள் இன்றி, கோயில் இரவு 11 மணிக்கு மூடப்பட்டது.
நாளை (நவம்பர் 17) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து காலை வழிபாடுகளை நடத்துவார். அதன் பின்னர் அபிஷேகம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், சந்தனக்காப்பு உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறும். மதியம் 1 மணிக்கு நடை மூடப்பட்டு, மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பூஜைகள் நடைபெறும்.
மண்டல காலத்தை முன்னிட்டு, பெருமளவிலான பக்தர்கள் சரண கோஷங்களுடன் சபரிமலையில் வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர். முதல் நாளாக ஆன்ட்ரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில பக்தர்கள் அதிகம் வருகை தந்தனர். பிற்பகலில் பம்பை, எரிமேலி போன்ற பகுதிகளில் நெரிசல் அதிகரித்ததால், வழக்கத்துக்கு மாறாக பக்தர்களுக்கு முன்கூட்டியே மலையேற அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் நீலிமலை, மரக்கூட்டம், அப்பாச்சிமேடு, நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தது.
வனப்பாதைகள் திறப்பு
சத்திரம், எரிமேலி, அழுதகடவு உள்ளிட்ட வனப்பாதைகள் நாளை காலை 8 மணிக்கு திறக்கப்படுகின்றன. வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது; அதிக சத்தம் செய்தல் தவிர்க்க வேண்டும்; நீர் நிலைகளில் கவனமாக நீராட வேண்டும்; வனப்பாதையை விட்டு விலகிச் செல்லக்கூடாது; சூழலை அசுத்தப்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.