பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடுமையான தோல்வியை சந்தித்துள்ள சூழலில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா திடீரென அரசியலிலிருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கிறேன் என்றும் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோகிணி தனது எக்ஸ் பதிவில் எழுதியதாவது:
“நேற்று, நான் ஒரு மகளாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், தாயாகவும் கடுமையான அவமானத்திற்குள்ளாக்கப்பட்டேன். என்னைத் திட்டியும், கேவலமாக பேசியும், செருப்பு எடுத்து தாக்க முயன்றும் அச்சுறுத்தினர். நான் எனது சுயமரியாதைக்காக எந்த சமரசமும் செய்யவில்லை; உண்மையை மறுக்கவில்லை. அதற்காகவே இந்த அவமானத்தை சந்திக்க நேரிட்டது.
நேற்று, கட்டாயத் தேவையால், அழுகை தாங்க முடியாத நிலையில் இருந்த பெற்றோர்கள் மற்றும் சகோதரிகளை விட்டுத் தனியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வந்தது. எனது தாய் வீட்டிலிருந்தே என்னை பிரித்தனர், என்னை அனாதையாக விட்டுவிட்டனர். யாரும் என் நிலையைச் சந்திக்க வேண்டாம்; எந்தக் குடும்பத்திலும் ரோகிணி போன்ற ஒரு மகள் அல்லது சகோதரி இருக்க வேண்டாம்.”
பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோகிணி மேலும் கூறியது:
“என்னை வீட்டை விட்டு வெளியேற்றியவர்கள் தேஜஸ்வி யாதவ், சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ். கட்சி ஏன் இப்படித் தோற்றது என்று நாடு முழுவதும் கேட்கிறது. ஆனால் அவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்கறதில்லை. நான் சஞ்சய் மற்றும் ரமீஸின் பெயரை வெளிப்படையாகச் சொன்னதாகவே என்னை அவமானப்படுத்தி, வீட்டிலிருந்து அனுப்பிவிட்டனர்.”
முன்னதாக, தனது எக்ஸ் பதிவில் அவர்:
“அரசியலை விட்டுவிடுகிறேன். என் குடும்ப உறவுகளையும் துண்டிக்கிறேன். இதைச் செய்யவேண்டும் என்று சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் என்னிடம் கூறினர். எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.”
என்று தெரிவித்திருந்தார்.
ரமீஸ் நேமத் கான் யார்?
சஞ்சய் யாதவ் RJD எம்.பியாகவும், தேஜஸ்விக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவர். ஆனால் ரோகிணி குறிப்பிட்ட ரமீஸ் பற்றி அதிகரித்த கேள்விகள் எழுகின்றன.
- ரமீஸ் நேமத் கான், தேஜஸ்வி யாதவின் நீண்டகால நண்பர்; அவரது கிரிக்கெட் காலத்திலிருந்தே அவர்களுக்குள் நட்பு உள்ளது.
- அவர் உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் (தற்போது ஷ்ரவஸ்தி) முன்னாள் எம்.பி ரிஸ்வான் ஜாகீரின் மருமகன்.
- இவரது மனைவி ஜெபா ரிஸ்வான் துளசிபூர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டார்—ஒருமுறை காங்கிரஸில், பின்னர் சுயேச்சையாக, ஆனால் இரண்டிலும் தோல்வி.
ரமீஸின் மீது உள்ள வழக்குகள்
- 2021-ல் காங்கிரஸ் தலைவர் தீபங்கர் சிங்கை தாக்கியதாக வழக்கு.
- 2022-ல் துளசிபூர் நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஃபிரோஸ் பப்பு கொலை சதியில் தொடர்புள்ளதாக கைது.
- 2023-ல் ஒப்பந்ததாரர் ஷகீல் கான் கொலை வழக்கிலும் அவரது பெயர்.
- உ.பி அரசு ரூ.4.75 கோடி மதிப்புடைய நிலத்தை பறிமுதல் செய்தது.
- 2024 ஜூலையில் குண்டர் சட்டத்தில் கைது; 2025 ஏப்ரலில் ஜாமீன்.
பின்னர் அவர், அவரது மனைவி இருவரும் உச்சநீதிமன்றம் சென்றதால், எதிர்கால வழக்குகளுக்கு நீதிமன்ற அனுமதி அவசியம் என்ற உத்தரவுக்கு பின் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
லாலுவிற்கு சிறுநீரக தானம் – ரோகிணியின் செல்வாக்கு
2022-ல் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட லாலு பிரசாத்துக்கு ரோகிணி தனது சிறுநீரகத்தை தானம் செய்தார். இதனால் RJD-இல் அவரது செல்வாக்கு பெரிதும் அதிகரித்தது.
ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
2025 பிஹார் தேர்தலை முன்னிட்டு, தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்; ஆனால் தேஜஸ்வி மறுத்தார். லாலு தலையீட்டிற்குப் பின் சிலருக்கு வேட்புமனு கிடைத்தது.
தேர்தல் முடிவுகள் வந்ததும் RJD மிகப்பெரும் தோல்வியை சந்திக்க, தேஜஸ்வி ஆதரவாளர்கள் ரோகிணியை குற்றம் சாட்டத் தொடங்கினர். இதுவே குடும்ப மோதலை வெளிப்படையாக வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.