‘ரஜினி 173’ திரைப்படம் குறித்த நிலையை இன்று கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் இயக்குநராக இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிக்கை வெளியிட்டது திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விலகியதற்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்படாததால், இணையத்தில் பல்வேறு ஊகங்கள் பரவின.
இந்நிலையில், இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனை பத்திரிகையாளர்கள் படம் குறித்த கேள்விகள் கேட்டனர். ‘ரஜினி 173’ படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அவரிடம் படத்தின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் கோரப்பட்டது.
அதற்கு கமல்ஹாசன்,
“ரஜினி படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை சுந்தர்.சி அவரே அறிக்கையாக வெளிப்படுத்திவிட்டார். அது அவருடைய கருத்து. நான் முதலீட்டாளன்; எனது நட்சத்திரத்துக்கு பிடித்த கதையை எடுத்தால் மட்டுமே அது ஆரோக்கியமானது. ரஜினி அவர்களுக்கு பிடிக்கும் கதையை பெறும் வரை தொடர்ந்து கேட்டு வருகிறோம். கதை நன்றாக இருக்க வேண்டும் — அதுதான் முக்கியம். புதிய அறிவிப்பு வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாருங்கள்,” என்று கூறினார்.
ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றி கேட்டபோது,
“அதற்கான கதைகளையும் கேட்டு வருகிறோம். எதிர்பாராததை எதிர்பாருங்கள்,” என்று கமல் பதிலளித்தார்